தீபக் சாஹர் 
விளையாட்டு

IPL 2022 | காயம் காரணமாக விலகியுள்ள சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரின் உருக்கமான பதிவு

செய்திப்பிரிவு

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர். அதுகுறித்து அவர் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு ஆல்-ரவுண்டர் தீபக் சாஹரை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு முந்தைய சீசனிலும் அவர் சென்னை அணிக்காக விளையாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பவர்பிளேயில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதில் இவர் வல்லவர். பேட்டிங்கிலும் கைகொடுப்பார்.

இருந்தாலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் அவருக்கு தொடை பகுதியில் தசை நார் சிதைவு ஏற்பட்டது. அந்த காயம் காரணமாக அவர் 15-வது ஐபிஎல் சீசனின் முதல் சில போட்டிகளை மிஸ் செய்வார் என சொல்லப்பட்டது. தற்போது அவர் காயத்திலிருந்து மீளாத காரணத்தால் தொடரைவிட்டு முழுவதுமாக விலகியுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“காயம் காரணமாக நடப்பு சீசனில் நான் விளையாட முடியாமல் போனதை எண்ணி வருந்துகிறேன். இந்த சீசனில் விளையாட வேண்டுமென விரும்பினேன். ஆனால் அது முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம். நிச்சயம் வலுவான கம்-பேக் கொடுப்பேன். உங்கள் அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துகள்தான் தேவை” என தெரிவித்துள்ளார் தீபக் சாஹர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடுகிறது. இதுவரை ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது சிஎஸ்கே.

SCROLL FOR NEXT