லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் ஜோ ரூட். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் தொடர்ச்சியான தோல்விதான் இதற்கு காரணம் என தெரிகிறது.
‘மாடர்ன் டே’ கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோ ரூட். இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரர். அதன் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அணியை கேப்டனாக முன்னின்று வழி நடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அலஸ்டைர் குக், விட்டுச் சென்ற பொறுப்பை கூடுமான வரையில் திறம்பட செய்தார்.
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவராக அறியப்படுகிறார் ரூட். 64 போட்டிகளில் அணியை வழி நடத்தியுள்ளார். அதில் 27 வெற்றி, 26 தோல்வி மற்றும் 11 போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளன. கேப்டனாக அவர் விளையாடி 5,295 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்களில் இது அதிகபட்ச ரன்கள் என சொல்லப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் ஸ்மித், ஆலன் பார்டர், பாண்டிங் மற்றும் விராட் கோலியை தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் அதிக ரன் குவித்த டெஸ்ட் கேப்டனாக ரூட் உள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளை குவித்திருந்தாலும் அண்மைய காலமாக இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர்களை இழந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை தழுவியது. அப்போது முதலே அவரது கேப்டன் பதவி குறித்த பேச்சு எழுந்திருந்தது. இப்போது ரூட் தானாக முன்வந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளாக அணியின் கேப்டனாக இருந்ததில் மகிழ்ச்சி. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து திரும்பிய பிறகு இந்த முடிவை எடுத்தேன். இருந்தாலும் இது குறித்து குடும்பத்தினரிடமும், நெருக்கமானவர்களிடமும் பேசிய பிறகே ஒரு முடிவுக்கு வர முடிந்தது. அனைவருக்கும் நன்றி” என ரூட் சொல்லியுள்ளார்.