புனே: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் 198 ரன்களை சேர்த்தது. ஷிகர் தவான் 50 பந்துகளில் 70 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.
இன்றைய ஐபிஎல் ஆட்டத்தின் 23-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான், மயங்க் அகர்வால் இணை துவக்கம் கொடுத்தது. விக்கெட்டை இழக்காமல் சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த இணையை 9-வது ஓவரில் முருகன் அஸ்வின் பிரித்தார். அவர் வீசிய பந்தில் மயங்க் அகர்வால் கேட்ச் கொடுத்து விக்கெட்டாகி வெளியேறினார். 32 பந்துகளில் 52 ரன்களை சேர்த்து அணிக்கு பலமாக திகழ்ந்தார் மயங்க் அகர்வால்.
அடுத்தாக களத்துக்கு வந்த ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவானுடன் கைகோத்தார். ஆனால், அவரை நீண்ட நேரம் நிலைக்கவிடாமல், ஜெய்தேவ் உனட்கட் போல்டாக்கி அனுப்பினார். 11 ரன்களில் பேர்ஸ்டோவ் வெளியேற, அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டனும் பும்ரா வீசிய பந்தில் போல்டாகி நடையை கட்டினார்.
இதையடுத்து, 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 132 ரன்களை சேர்த்தது. 50 பந்துகளில் 70 ரன்களை குவித்து அதிரடி காட்டி வந்த ஷிகர் தவானை 16-வது ஓவரில் பாசில் தம்பி பெவிலியனுக்கு அனுப்பினார். தொடர்ந்து வந்த ஷாருக்கான் 15 ரன்களில் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. ஜித்தேஷ் ஷர்மா 30 ரன்களிலும், ஓடியன் ஸ்மித் 1 ரன்களிலும் நாட்அவுட் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர்.
மும்பை அணி தரப்பில் பாசில் தம்பி 2 விக்கெட்டுகளையும், உனட்கட், பும்ரா, முருகன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.