மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டத்தை தவிர்த்து கேட்ச்களை கோட்டை விட்ட இளம் வீரர் முகேஷ் சவுத்ரிக்கு ஆறுதல் சொன்னார் மகேந்திர சிங் தோனி. இது ரசிகர்களின் கவனைத்தை ஈர்த்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சிஎஸ்கே. பெங்களூரு அணிக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னைக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த சீசனில் கேப்டன் பொறுப்பை துறந்து அணியில் அனுபவ வீரராக விளையாடி வருகிறார் முன்னாள் கேப்டன் தோனி. வெற்றி, தோல்வி என எதுவானாலும் அவர் அதிகம் ரியாக்ட் செய்ய மாட்டார். அவரது இந்த பக்குவம் சர்வதேச கிரிக்கெட் களம் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் களம் வரை தொடர்ந்து வருகிறது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதும் சென்னை அணியின் மற்ற வீரர்கள் எல்லாம் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தனர். வரிசையாக நான்கு தோல்விகளுக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி என்பதால் இந்த கொண்டாட்டம். ஆனாலும் எப்போதும் போல தோனி ஆட்டம் முடிந்ததும் எந்தவித ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. மாறாக இரண்டு கேட்ச்களை நழுவ விட்ட இளம் வீரர் முகேஷ் சவுத்ரியிடம் நேரடியாக சென்று அவருக்கு ஆறுதல் சொன்னார் தோனி. அது கேமராவில் பதிவாகி இருந்தது. முகேஷ் தோளில் கை போட்டபடி அவரை தேற்றி இருந்தார் தோனி.
25 வயதான முகேஷ் சவுத்ரி, பெங்களூருக்கு எதிரான போட்டியில் 12 மற்றும் 15-வது ஓவரில் இரண்டு கேட்ச்களை பிடிக்க தவறினார். அதனால் ஆட்டம் மாறும் சூழல் இருந்தது. ஆனாலும் சென்னை பவுலர்கள் அடுத்த சில ஓவர்களில் அந்த இரண்டு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். தோனியின் இந்த செயலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘சிறந்த தலைமைப் பண்பு’, ‘ஓ கேப்டன். எங்கள் கேப்டன்’, ‘தலைவன். தலைவன் தான்’, ‘மக்களின் கேப்டன்’ என பல்வேறு ரியாக்ஷன்களை ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.
Oh Captian!