சாய்னா நேவால் 
விளையாட்டு

காமன்வெல்த், ஆசிய விளையாட்டுக்கான தகுதிப் போட்டிகளை தவிர்க்க சாய்னா முடிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய பேட்மிண்டன் விளையாட்டு நட்சத்திரமான சாய்னா நேவால், எதிர்வரும் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டிகளை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் வரும் ஜூலை மாதமும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் வரும் செப்டம்பர் வாக்கிலும் நடைபெறவுள்ளது. இதற்கு இந்தியா சார்பில் பங்கேற்கும் பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கு தகுதிப் போட்டிகள் வரும் 15 முதல் 30-ஆம் தேதி வரையில் நடத்த இந்திய பேட்மிண்டன் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதில்தான் சாய்னா பங்கேற்கப் போவதில்லை என தெரிகிறது. தனது முடிவை எழுத்துபூர்வமாக இந்திய பேட்மிண்டன் சங்கத்திடம் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் உள்ள இந்திய வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க நேரடியாக தகுதி பெறுவார்கள் என தெரிவித்திருந்தது இந்திய பேட்மிண்டன் சங்கம்.

இந்நிலையில், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான சாய்னா தனது முடிவினை தெரிவித்துள்ளார். காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார் அவர். தற்போது உலக பேட்மிண்டன் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ளார். 2010 மற்றும் 2018 காமன்வெல்த்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றவர். இருந்தாலும் இந்த முறை தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் வாய்ப்பு அவருக்கு பிரகாசமானதாக அமையவில்லை.

32 வயதான சாய்னா கடந்த மாதம் நடைபெற்ற ஜெர்மன் ஓபன், ஆல்-இங்கிலாந்து ஓபன் மற்றும் ஸ்விஸ் ஓபன் தொடரில் இரண்டாவது சுற்றுக்கு மேல் முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT