மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்சர்களை விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழி நடத்தி வருகிறார் பாண்டியா. மொத்தம் 96 ஐபில் போட்டிகளில் விளையாடி உள்ளார் அவர். ஆல்-ரவுண்டரான அவர் 1617 ரன்களும், 45 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்சர்களை விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்திக். இதனை நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பதிவு செய்திருந்தார் அவர்.
28 வயதான ஹர்திக், சூரத் நகரை சேர்ந்தவர். ஐபிஎல் களத்தில் 2015 சீசன் முதல் விளையாடி வருகிறார். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் இந்திய கிரிக்கெட் அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் களத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார். நடப்பு சீசனில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ‘பலே பாண்டியா’ என சொல்லும் அளவுக்கு அவரது செயல்பாடு அமைந்துள்ளது.
ஐபிஎல் களத்தில் 100 சிக்சர்களை பதிவு செய்ய 1046 பந்துகளை எதிர்கொண்டுள்ளார் பாண்டியா. கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் 657 பந்துகளிலும், கிறிஸ் கெயில் 943 பந்துகளிலும் 100 சிக்சர்களை ஐபிஎல் களத்தில் பதிவு செய்துள்ளனர். பொல்லார்ட் (1094), மேக்ஸ்வெல் (1118), ரிஷப் பண்ட் (1224), யூசுப் பதான் (1313), யுவராஜ் சிங் (1336), பட்லர் (1431), டுவைன் ஸ்மித் (1481), வாட்சன் (1495) பந்துகளை எதிர்கொண்டு 100 சிக்சர்கள் பதிவு செய்துள்ளனர்.