வாஷிங்டன்: எதிர்வரும் 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது அமெரிக்க கிரிக்கெட் அணி. அமெரிக்க அணியில் இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் உன்முக் சந்த் இடம் பெற்றுள்ளார்.
2024-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் உடன் இணைந்து நடத்துகிறது அமெரிக்கா. அதனால் அமெரிக்க கிரிக்கெட் அணி இந்தத் தொடரில் பங்கேற்க நேரடியாக தகுதி பெற்றுள்ளது. அமெரிக்க அணியில் இந்தியாவைச் சேர்ந்த உன்முக் சந்த் விளையாடி வருகிறார். இவர் 2012 வாக்கில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல செய்த கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
29 வயதான உன்முக் சந்த் டெல்லியில் பிறந்தவர். இந்திய அளவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் உத்தராகண்ட் அணிகளுக்காக விளையாடி வந்தவர். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் விளையாடிய அனுபவம் இவருக்கு உள்ளது. இருந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் முறையாக கிடைக்காமல் இருந்தது. அந்த விரக்தியின் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்க கிரிக்கெட் அணியில் விளையாட தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். முன்னதாக 2021 ஆகஸ்டில் அவர் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
வரும் 2024 முதல் அமெரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதியை பெறுகிறார் அவர். அதே நேரத்தில் அந்த அணி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. அதில் இந்தியாவும் பங்கேற்று விளையாடும். இத்தகைய சூழலில் இந்தியாவுக்கு எதிராக சந்த், அமெரிக்காவுக்காக விளையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் இது குறித்து ட்வீட் மூலம் எதிரிவினையாற்றியுள்ளனர்.
USA qualified for the next t20i WC
So Unmukt Chand may play against India then