மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது. குல்தீப்யாதவ், கலீல் அஹமத் ஆகியோரின் சிறப்பாக பவுலிங்கில் கொல்கத்தா தோல்வியை தழுவியது
ஐபிஎல் 15வது சீசனின் 19-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியின் இன்னிங்க்ஸை பிரித்வி ஷா, டேவிட் வார்னர் தொடங்கி வைத்தனர். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த இணையை 8 ஓவரில் வருண் சக்ரவர்த்தி பிரித்தார். அவர் வீசிய பந்து பிரித்விஷாவைக் கடந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. 29 பந்துகளில 51 ரன்களை குவித்த அவர், நடையைக்கட்டினார். அடுத்தாக ரிஷப் பண்ட் களமிறங்க 10 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை சேர்த்திருந்தது டெல்லி அணி.
14 பந்துகளில் 27 ரன்களை குவித்திருந்த ரிஷப் பண்ட் ரஸ்ஸல் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த லலித் யாதவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ரோவ்மேன் பாவெலும் வந்த வேகத்தில் 8ரன்களுடன் திரும்பிச் சென்றார். மறுபுறம் நிலைத்து ஆடி அணிக்கு நம்பிக்கை கொடுத்த டேவிட் வார்னரை 16-வது ஓவர் வீசிய உமேஷ் யாதவ் வெளியேற்றினார். 45 பந்துகளில் 61 ரன்களை குவித்து அணிக்கு பலமாக திகழ்ந்தார் வார்னர். இதையடுத்து 17 ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை சேர்த்திருந்தது டெல்லி அணி. தொடர்ந்து, அக்ஷர் படேலும், ஷர்துல் தாக்கூரும் இணைந்து அணியின் ரன்ரேட்டை ஏற்றினர். அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 215 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா தரப்பில்,உமேஷ்யாதவ், வருண் சக்ரவர்த்தி ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், சுனில் நரேன 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், ரஹானே இணை துவக்கம் கொடுத்தது. இவர்களின் பாட்னர்ஷிப்பை தொடர விடாமல் 2வது ஓவர் வீசிய கலீல் அஹமத் 18 ரன்கள் எடுத்திருந்த வெங்கடேஷ் ஐயரை அவுட்டாக்கி வெளியேற்றினார். அவர் வெளியேறிய சில நிமிடங்களில் 14 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்த ரஹானேவையும் கலீல் அஹமத் நடையை கட்ட வைத்தார். அடுத்து, 30 ரன்களில் நிதிஷ் ரானா வெளியேறினார்.
33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்த ஷ்ரேயாஸ் ஐயரும் கிளம்ப, 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே அந்த அணி சேர்த்திருந்தது. தொடர்ந்து வந்த சாம் பில்லிங்ஸ், பேட் கம்மின்ஸ், சுனில் நரேன்,உமேஷ் யாதவ் வந்ததும் போவதுமாகவே இருந்தனர். குறிப்பாக, 15-வது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா அணி. தடுமாற்றுத்துடன் ஆடிய கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 44 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை டெல்லி பதிவு செய்தது.
டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், கலீல் அஹமத் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டையும், லலித் யாதவ் ஆகியோர தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.