விளையாட்டு

IPL 2022 | “சிஎஸ்கே-வுக்கு வாருங்கள்” - ரசிகரின் ட்வீட்டுக்கு அமித் மிஸ்ரா அளித்த ’ஜாலி’ பதில்

செய்திப்பிரிவு

"சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து விடுங்கள்" என்ற ரசிகரின் ட்வீட்டுக்கு சுவாரசிய பதில் அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா.

நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் எந்தவொரு அணியும் இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவை வாங்கவில்லை. அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக விளையாடாமல் போட்டிகளை வெளியிலிருந்து கவனித்து வருகிறார் அவர்.

இதற்கு முன்னதாக டெல்லி, டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத் அணிகளுக்காக ஐபிஎல் களத்தில் விளையாடியுள்ளார். 39 வயதான அவர் 154 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 166 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மொத்தம் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மிஸ்ரா. "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து விடுங்கள்" என ரசிகர் ஒருவர் மிஸ்ராவிடம் கேட்டிருந்தார். “சிஎஸ்கே-வுக்கு வாருங்கள்” என சொல்லி அமித் மிஸ்ராவை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார் அந்த ரசிகர்.

“மன்னிக்கவும் தோழரே. அதற்கு நான் இன்னும் இரண்டு வயது இளையவனாக உள்ளேன்” என ஜாலியாக தெரிவித்துள்ளார் மிஸ்ரா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலும் 30 வயதை கடந்த வீரர்கள்தான் இடம் பெற்றிருப்பார்கள். அதனால் சென்னை அணியை ‘டேடி ஆர்மி’ என அழைப்பதுண்டு. அதோடு குஜராத் டைட்டன் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவை பாராட்டியுள்ளார் மிஸ்ரா. அந்த அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி இந்த சீசனில் விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. அடுத்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையாடுகிறது.

SCROLL FOR NEXT