மும்பை: ஷாபாஸ் அகமது இந்த ஐபிஎல் சீசனில் நீண்ட அளவிலான பங்களிப்பை வழங்குவார் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
170 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு கடைசி 7 ஓவர்களில் 82 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் ஷாபாஸ் அகமது 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
போட்டி முடிவடைந்த பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் கூறும்போது, “ஷாபாஸ் அகமது ஒல்லியான வீரர் என்பதால், அவரால் நீண்ட நேரம் பந்தை அடிக்க முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவரால் பந்தை வெகுதூரம் அடித்து நொறுக்க முடியும். பந்து அதிகஈரமாக இருந்ததாலும், இடது கை ஆட்டக்காரராகவும் இருப்பதால் ஷாபாஸ் அகமதுவை பந்துவீச்சில் பயன்படுத்தவில்லை.
ஆனால் அவர் இந்த சீசனில் நிச்சயமாக நீண்ட பங்களிப்பார். தினேஷ் கார்த்திக் சிறந்த குணம் கொண்டவர். அழுத்தத்தின் கீழ் அவரது அமைதி அற்புதமானது. அவர், எங்கள் அணியின் சொத்து. எங்கள் வீரர்கள் 18-வது ஓவர் வரை நன்றாக பந்து வீசினார்கள். பிறகு ஜாஸ் பட்லர் சில நல்ல ஷாட்களை அடித்தார். இருப்பினும் ஆட்டத்தின் சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தின் மேற்பரப்பு தன்மை ஆகியவற்றால் நாங்கள் நினைத்த ஸ்கோர் கிடைத்தது” என்றார்
| இன்றைய ஆட்டம் டெல்லி - லக்னோ நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் |