மும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கும் இடையிலான ஐபிஎல் ஆட்டத்தின் 13-வது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர், யஸஷ்வி ஜெய்ஸ்வால் இணை துவக்கம் கொடுத்தது. பொறுமையாக ஆட்டத்தை தொடங்கிய இந்த இணையை 2-வது ஓவரில் டேவிட் வில்லே பிரித்தார். அவர் வீசிய பந்து யஸஷ்வி ஜெய்ஸ்வாலை கடந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.
யஸஷ்வி நடையை கட்ட, படிக்கல் களத்திற்கு வந்தார். பட்லர், படிக்கல் இணை அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர். 9 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 73 ரன்களை சேர்ந்திருந்தது. 10-வது ஓவரில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் படிக்கல். அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்ட ராஜஸ்தான் அணியை பட்லரும், ஹெட்மேயரும் இணைந்து பொறுமையான ஆட்டத்துடன் நகர்த்திச்சென்றனர். இதையடுத்து 15-ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை சேர்த்திருந்தது ராஜஸ்தான். பட்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கு ஹெட்மேயர் கைகொடுத்தார். குறிப்பாக பட்லர் தான் எதிர்கொண்ட பந்துகளை சிக்ஸர்களாக மாற்றினார். பவுண்டரிகள் எதுவும் அடிக்காமல், சிக்ஸர்களாகவும், சிங்கிள்களாவும் ரன்களை சேர்த்தார்.
20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 169 ரன்களை சேர்த்தது. பெங்களூரு அணி தரப்பில் டேவிட் வில்லே, ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.