விளையாட்டு

வெற்றியுடன் ஜூனியர் ஹாக்கி மகளிர் உலகக் கோப்பையை தொடங்கியது இந்தியா

செய்திப்பிரிவு

இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணியினர் நடப்பு FIH ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளனர். இந்தத் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 1 முதல் 12 வரையில் தொடர் நடைபெறுகிறது.

15 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய அணி 'D' பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த பிரிவில் ஜெர்மனி, மலேசியா மற்றும் வேல்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி முதல் போட்டியில் வேல்ஸ் அணியுடன் விளையாடியது. தென்னாப்பிரிக்க நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பொஷேஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom) நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் 5 -1 என்று கோல் கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

இந்திய வீராங்கனைகள் லால்ரிண்டிகி 2 கோல் பதிவு செய்தார். லால்ரெம்சியாமி, மும்தாஜ் கான், தீபிகா ஆகியோர் தலா ஒரு கோல் பதிவு செய்தனர்.

அடுத்ததாக நாளை ஜெர்மனி அணிக்கு எதிராகவும், 5-ஆம் தேதி மலேசியாவுக்கு எதிராகவும் இந்தியா விளையாடுகிறது. குரூப் சுற்று புள்ளிப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் தற்போது உள்ளது. கடந்த 2021 டிசம்பரில் இந்தத் தொடர் நடைபெற இருந்தது. கரோனா காரணமாக இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2013 FIH ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மூன்றாவது இடம் பிடித்திருந்தது. கடந்த 1989 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் கிளாஸ் பர்ஃபாமென்ஸாக இது உள்ளது.

SCROLL FOR NEXT