விளையாட்டு

IPL 2022 | உத்தப்பா, ஷிவம் துபே விளாசல் - லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கே 210 ரன்கள் குவிப்பு

செய்திப்பிரிவு

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசனின் 7வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. பிரபோர்ன் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் டெவான் கான்வே உட்காரவைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மொயின் அலி சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் டாப் ஆர்டர் மாற்றம் செய்யப்பட்டது. ருதுராஜ் கெய்க்வாட் உடன் ராபின் உத்தப்பா அணியில் ஓப்பனிங்கில் இறங்கினார்.

முதல் போட்டியில் டக் அவுட் ஆன ருதுராஜ் இந்தமுறையும் ஏமாற்றம் அளித்தார். ஆவேஷ் கான் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால் சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. எனினும், உத்தப்பா உடன் நட்சத்திர வீரர் மொயின் அலி பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் சேர்ந்து பவர்பிளே ஓவர்களை துவம்சம் செய்தனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதேவேகத்தில், உத்தப்பா அதிரடியாக அரைசதமும் அடித்தார். அரைசதம் கடந்த வேகத்தில் அவுட் ஆகவும் செய்தார். இவர்கள் கூட்டணியை ரவி பிஷ்னோய் பிரித்தார்.

இதன்பின் சில ஓவர்களில் 35 ரன்கள் எடுத்த மொயின் அலியும் ஆவேஷ் கான் வேகத்தில் வீழ்ந்திட, இளம் வீரர் ஷிவம் துபே அணியின் மொமெண்டத்தை விடாமல் தொடர்ந்தார். இதனால் ரன் ரேட் 10-க்கும் குறையாமலே சென்றது. ஒரு ரன்னில் அரைசதம் கடக்கும் வாய்ப்பை நழுவவிட்டு 49 ரன்களில் ஷிவம் துபே அவுட் ஆனாலும், அவருக்கு பிறகு அம்பதி ராயுடு மற்றும் தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியை தொடர்ந்தனர். தோனி வந்த முதல் இரண்டு பந்துகளிலேயே சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். இறுதி ஓவரில் ஆண்ட்ரு டை அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். எனினும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்தது.

தோனி 16 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். லக்னோ அணித்தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் மற்றும் ஆண்ட்ரு டை தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT