விளையாட்டு

IPL 2022 | ஹஸரங்கா சுழலில் வீழ்ந்த கேகேஆர் - ஆர்சிபி அணிக்கு 129 ரன்கள் இலக்கு

செய்திப்பிரிவு

மும்பை: முதல் போட்டியில் வெற்றிபெற்றிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இன்றைய போட்டியில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஐபிஎல் 15-வது சீசனின் 6வது ஆட்டம் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளசிஸ் இந்த சீசனின் டிரெண்ட் படி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தங்களின் பழைய லெவனுடனே பெங்களூரு களமிறங்கியது. அதேநேரம் கொல்கத்தா டிம் சவுத்தியை அணிக்குள் கொண்டுவந்திருந்தது.

அஜிங்கியா ரஹானேவும் வெங்கடேஷ் ஐயரும் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கினர். மூன்று ஓவர் மட்டுமே இந்தக் கூட்டணி நிலைத்தது. இந்தக் கூட்டணியை உடைத்து கொல்கத்தா அணியின் சரிவை தொடங்கி வைத்தார் ஆகாஷ் தீப். 4வது ஓவரின் முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் அவுட் ஆனார். பின்னர் சிராஜ் தன் பங்கிற்கு 9 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவை வெளியேற்றினார்.

ஆகாஷ் தீப் மீண்டும் நிதீஷ் ராணாவை வந்த வேகத்தில் வெளியேற்ற, இப்படியாக பவர் பிளே முடிவதற்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. வனிந்து ஹஸரங்கா மற்றும் ஹர்ஷல் படேல் மீதமுள்ளவர்களை பார்த்துக்கொண்டனர். இவர்கள் இருவரின் பந்துவீச்சில் கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டுமே அதிகபட்சமாக 25 ரன்கள் சேர்த்தார்.

இதனால், 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது கொல்கத்தா அணி. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக வனிந்து ஹஸரங்கா 4 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் மூன்று விக்கெட்களையும், ஹர்சல் படேல் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT