ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந் தது. முதலில் பேட் செய்த புனே 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அஜிங்க்ய ரஹானே 52 பந்தில் 67 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 31, தோனி 23 ரன் சேர்த்தனர்.
161 ரன்கள் இலக்குடன் விளையாடி கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் பந்தில் ராபின் உத்தப்பா ஆட்டமிழக்க 3-வது ஓவரில் 2 ரன்களுக்கு ஆசைப்பட்டு காம்பீர் ரன் அவுட் ஆனார். அவர் 11 ரன் எடுத்தார். எதிர்பாராத வகையில் சூர்ய குமார் யாதவ் சிறப்பாக விளையாடி 49 பந்தில், 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாச கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை பிறந்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திஷாரா பெரேரா வீசிய 3-வது பந்தை உமேஷ் யாதவ் சிக்ஸருக்கு விளாச 19.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. உமேஷ் யாதவ் 8, சுனில் நரைன் ரன் எதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக சூர்ய குமார் யாதவ் தேர்வானார்.
தோல்வி குறித்து புனே கேப்டன் தோனி கூறும்போது, "சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன் குவிப்பது சிரமமாக இருந்தது. இதனால் மட்டைக்கு நேராக பந்து வீச வேண்டாம் என சுழற்பந்து வீச்சாளர்களிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்களது பந்தில் 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. என்ன நடந்தது என்பது பற்றி கவலையில்லை. களத்தில் எப்படி திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. களத்தில் சந்தோஷமாக தருணம் நிலவ வேண்டுமென்றால் நெருக்கடியான நிலையில் வெற்றி பெற என்ன தேவை என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இதில் நிச்சயமாக நாங்கள் பின்தங்கியே உள்ளோம். அதிலும் முக்கியமாக பந்து வீச்சு துறையில் இந்த நிலையே காணப்படுகிறது. வீரர்களுக்கு அறிவுரைதான் வழங்க முடியும். பந்தை கையில் எடுக்கும் நீங்கள், எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஒட்டுமொத்தமாக பல்வேறு துறைகளில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும்.
இவ்வாறு கூறினார் தோனி.