சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கிடையேயான 20 ஓவர் நட்புறவு கிரிக்கெட் போட்டி, சென்னை கிண்டி ஐஐடி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அணி வெற்றி பெற்றது. இரு அணிகளிலும் பங்கேற்ற நீதிபதிகள்.படம்: பு.க.பிரவீன் 
விளையாட்டு

நீதிபதிகளுக்கு இடையிலான நட்புறவு கிரிக்கெட் போட்டி: கேரளாவை வீழ்த்தி சென்னை கோப்பையை கைப்பற்றியது

செய்திப்பிரிவு

சென்னை மற்றும் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையே நேற்று நடந்த நட்புறவு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கேரளாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றியது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கேரளா உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடையிலான 20 ஓவர் நட்புறவு கிரிக்கெட் போட்டி கிண்டி ஐஐடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அணி, தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் தலைமையில் பேட்டிங்கை தேர்வுசெய்து களமிறங்கியது. இந்த அணியில் நீதிபதி ராஜ விஜயராகவன் மட்டும் நிலைத்து விளையாடி அதிகபட்சமாக 30 ரன்களைக் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக அனைத்து விக்கெட்களையும் இழந்து கேரள அணி 104 ரன்களைசேர்த்தது. சென்னை அணியின் சார்பில் நீதிபதி அப்துல் குத்தூஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

105 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக்கு இலக்குடன் அடுத்ததாக பேட்டிங் செய்த சென்னை உயர்நீதிபதிகள் அணியின் தொடக்க வீரர்களாக நீதிபதிகள் என்.ஆனந்த்வெங்கடேஷூம், ஜி.சந்திரசேகரனும் களமிறங்கினர். ஆனந்த் வெங்கடேஷ் 3 ரன்களிலும், ஜி.சந்திரசேகரன் 23 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்ததாக பேட்டிங் செய்த நீதிபதிஎஸ்.வைத்யநாதன் அதிகபட்சமாக 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், எம்.கோவிந்தராஜ் ஜோடி அனைத்து பந்துகளையும் அடித்து ஆடி 16.2 ஓவர்களில் 106 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. அப்துல் குத்தூஸ் 25 ரன்களும், எம்.கோவிந்தராஜ் 11 ரன்களும் சேர்த்தனர். இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்ற அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கேரளாவை எளிதாக வெற்றி கொண்டு கோப்பை யைத் தட்டிச்சென்றது.

இந்த கிரிக்கெட் போட்டியில் அனைத்து நீதிபதிகளும் பங்கேற்றுபோட்டியாளர்களை வெகுவாக உற்சாகப்படுத்தினர். அம்பயர் களாக வி.குருராஜன், வி.மோகன், ஏ.மணிகண்டன் ஆகியோர் செயல்பட்டனர்.

நேற்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றிபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அணிக்கு வெற்றிக் கோப்பையை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வழங்கி கவுரவித்தார்.

SCROLL FOR NEXT