மும்பை: வான்கடே மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது.
132 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அஜிங்கியா ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. இந்தக் கூட்டணியை பிராவோ பிரித்தார். 16 ரன்கள் எடுத்த நிலையில் பிராவோ வீசிய 7வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெங்கடேஷ் ஐயர் அவுட் ஆகினார். இதன்பின் வந்த ராணா அதிரடியாக விளையாடினாலும், 21 ரன்களில் அவரும் பிராவோ பந்துவீச்சில் அவுட் ஆகினார். மறுமுனையில் பொறுப்பாக விளையாடி வந்த அஜிங்கியா ரஹானே 44 ரன்கள் எடுத்திருந்தபோது சான்டனர் பந்துவீச்சில் தூக்கடி அடிக்க முயன்று ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.
எனினும் அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ் இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக சாம் பில்லிங்ஸ் இறுதிக்கட்டத்தில் சென்னை அணியின் பந்துவீச்சை எல்லைக்கோடுகளுக்கு பறக்கவிட்டார். இதனால் 18.3 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த அணியில் கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயர் 20 ரன்களுடன், ஷெல்டன் ஜாக்சன் 3 ரன்களுடனும் நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக இருந்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.