விளையாட்டு

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி: முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி

செய்திப்பிரிவு

அஸ்லான் ஷா ஹாக்கி தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

25-வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி மலேசியாவின் இபோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் 5 முறை பட்டம் வென்ற இந்தியா, நடப்பு சாம்பியன் நியூஸிலாந்து, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மலேசியா, கனடா, ஜப்பான் ஆகிய 7 அணிகள் பங்கேற்றுள்ளன.

வரும் ஆகஸ்ட் மாதம் நடை பெறும் ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த வகையில் தயாராகும் விதமாக அமைந்துள்ள இந்த போட்டியின் தொடக்க நாளான நேற்று இந்தியா, ஜப்பான் அணியை எதிர்த்து விளை யாடியது. இதில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோலை அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை அந்த அணியின் கென்ஜி கிஸாடோ கோலமாக மாற்றினார்.

25-வது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மான்பிரித் சிங் கோல் அடிக்க 1-1 என சமநிலையை பெற்றது இந்திய அணி. 32-வது நிமிடத்தில் கேப்டன் சர்தார் சிங் கோல் அடித்ததால் இந்திய அணி முன்னிலைப் பெற்றது. அதன் பின்னர் கடைசி வரை இரு அணி களாலும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத பாகிஸ் தான் 3-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. பாகிஸ்தான் தரப்பில் மொஹ்மது காதிர் இரு கோல்களும், மொஹ்மது தவுஸிக் ஒரு கோலும் அடித்தனர்.

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி, நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 1.35 மணிக்கு நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT