மெல்போர்ன்: மகளிர் டென்னிஸ் விளையாட்டில் உலக தர வரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லிக் பார்டி 25 வயதில் ஓய்வை அறிவித்து ஒட்டுமொத்த டென்னிஸ் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கண்ணீர் மல்க ஓய்வு: தனது ஓய்வு குறித்து ஆஷ்லிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க ஒரு வீடியோ மூலம் அறிவித்துள்ளார். அவருடன் அவரது நண்பரும் டபுள்ஸ் பார்ட்னரானவருமான கேஸி டெல்லாகுவா இருந்தார். அந்த வீடியோவில் ஆஷ்லிக் பேசுகையில், "இன்று என் வாழ்வில் கடினமான, உணர்வுப்பூர்வமான நாள். நான் எனது ஓய்வை அறிவிக்கிறேன். அதற்காக என் தோழியை துணைக்கு அழைத்துள்ளேன். உண்மையில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஓய்வை அறிவிக்க தயாராக இருக்கிறேன். டென்னிஸ் எனக்காக என்னவெல்லாம் கொடுத்ததோ அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது கனவுகளை நிறைவேற்றிய டென்னிஸ், அதையும் தாண்டி நிறைய செய்துள்ளது. ஆனாலும், நான் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் எனக் கருதுகிறேன். எனது ரேக்கட்டை வைத்துவிட்டு மற்ற கனவுகளை துரத்த ஆயத்தமாகிவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
44 ஆண்டு கனவை நிறைவேற்றியவர்.. ஆஸ்திரேலியர்களின் நீண்ட கால கனவு தங்கள் சொந்த நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை ஓர் ஆஸ்திரேலியர் வெல்ல வேண்டும் என்பதே. இதுவரை எந்த ஆஸ்திரேலியரும் இந்தக் கோப்பையை வெல்லாமல் இல்லை. 1978-ல் கிறிஸ் ஓ நெயில் வென்றுள்ளார். ஆனால், அதன்பிறகு 44 ஆண்டுகளாக எந்த ஓர் ஆஸ்திரேலிய வீராங்கனையும் அந்த சாதனையை புரியவில்லை. அந்த நீண்ட ஏக்கத்தை கடந்த ஜனவரியில் தீர்த்துவைத்தார் அஷ்லிக் பார்ட்டி. இதற்கான கோப்பை வழங்கப்பட்டபோது அஷ்லிக்கிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. அந்தப் புகைப்படம் டென்னிஸ் உடனான அவரின் காதலை வெளிப்படுத்தியது. ஆறு வயதில் தனது முதல் டென்னிஸ் கோப்பையுடன் அஷ்லிக் போஸ் கொடுத்த புகைப்படம்தான் அது.
2011-ல் விம்பிள்டன் ஜூனியர் பட்டம், 2021-ல் விம்பிள்டன் சாம்பியன் பட்டம், இடையில் 2019-ல் பிரெஞ்ச் ஓபன் என்று வெற்றிகளைக் குவித்தவர் 2022 ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பை என வாகை சூடியுள்ளார்.
4 வயதிலேயே.. ஆஷ்லிக் தனது 4-வது வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கியவர். பெற்றோரின் ஊக்கத்தால் நான்கு வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையிலெடுத்த அவருக்கு வழிகாட்டியாக இருந்தது ஆஸ்திரேலியாவின் மற்றொரு சாதனை வீராங்கனை எவோன் கூலாகாங் காவ்லி. அவரின் பயிற்சியால் தொழில்முறை வீராங்கனையாக உருவெடுத்தார். பின்னர் மிகச் சிறிய வயதிலேயே டென்னிஸில் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். 2011-ம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியரில் சாம்பியன் ஆகி கவனம் ஈர்த்தவர், சீனியர் வீரர்களுடன் விளையாடத் தொடங்கினார். தனது 16 வயதிலேயே கேசி டெல்லாக்வாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் உட்பட மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் இரண்டாம் நபராக வந்தார்.
இரட்டையர் ரேங்கிங் பட்டியலில் முன்னேறி வந்தாலும் ஒற்றையர் பிரிவில் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஒற்றையர் பிரிவில் அவர் கலந்துகொண்ட 12 கிராண்ட் ஸ்லாம்களில், மூன்று முறை தகுதிச்சுற்றை தாண்டவில்லை. ஏழு முறை முதல் சுற்றுவரை சென்றார். இரண்டு முறை இரண்டாவது சுற்று. சர்வதேச தரவரிசையில் 300-க்கு பிறகு பின்தங்கி இருந்தபோதுதான் டென்னிஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அஷ்லிக்கின் வயது 18.
கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் டென்னிஸ் பக்கம் தலைவைத்துகூட படுக்கவில்லை. மாறாக, அவர் தேர்ந்தெடுத்தது கிரிக்கெட். சிறுவயது முதல் டென்னிஸ் மீது தீராக்காதல் கொண்டவர் தோல்விகளால் கிரிக்கெட் பக்கம் சென்றுவிட்டார் நாம் நினைக்கலாம். ஆனால் அஷ்லிக் அதற்கு வேறு காரணங்கள் சொன்னார். "எனக்கு வயது குறைவுதான். ஒரு டீன் ஏஜ் பெண் என்ற முறையில் பலவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதனால் கிரிக்கெட் விளையாட முடிவெடுத்தேன்" என்று சொன்னவர் பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட், குயின்ஸ்லாந்து ஃபையர் அணிக்காக மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் மட்டையைச் சுழற்றினார்.
பின்னர் கிரிக்கெட்டுக்கும் முழுக்குபோட்டவர், 2016 கடைசியில் மீண்டும் தனது சிறுவயது காதலான டென்னிஸுக்கு கம்பேக் கொடுக்கிறார். இந்த கம்பேக் அவர் தொட்டதெல்லாம் அவருக்கு பொன்னாக்கி கொடுத்தது.