ஆக்லாந்து: மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில், வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி வாய்ப்பில் தொடர்ந்து நீட்டித்து வருகிறது இந்திய அணி.
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு வெற்றி மற்றும் மூன்று தோல்விகள் என பின்தங்கி இருந்தது. இந்நிலையில், இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது. ஹாமில்டனில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வெர்மா இணை ஓப்பனிங்கை தொடங்கி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸ்மிருதி 30 ரன்களுக்கும், ஷெஃபாலி 42 ரன்களுக்கும் ஆட்டமிழக்க மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய யாஸ்திகா பாட்டியா 50 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் மிதாலி டக் அவுட் ஆனாலும், மற்ற வீராங்கனைகள் ஓரளவு இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்து இந்திய அணி. வங்கதேச வீராங்கனை ரித்து மோனி அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் 230 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 6-வது ஓவரின் முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இந்த தொடரில் இந்திய அணியின் ஸ்டார் பவுலராக விளங்கும் ராஜேஸ்வரி கெய்க்வாட் முதல் விக்கெட்டை கைப்பற்றி வங்கதேசத்தின் சரிவை தொடங்கிவைத்தார். இதன்பின் சினே ரானா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா போன்ற இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் வங்கதேச விக்கெட்டுகளை சாய்த்தனர்.
சினே ரானா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, 41வது ஓவரில்119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. இறுதியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் இன்னும் உயிருடன் உள்ளது. வரும் 27-ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு விளையாடும் இந்தியா அதில் வெற்றி பெற்றால், அரையிறுதியில் நிச்சயம் விளையாடும். இந்திய அணியின் ரன் ரேட்டும் அதற்கேற்றாற்போல் உள்ளது.