டெல்லி: 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க வாய்ப்பு கிடைத்தும் அதனை தனது மனைவி நிராகரித்தது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் பேசியுள்ளார்.
2011 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியர்கள் மறக்கமுடியாத ஒரு தருணம். கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் வைத்து இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் எம்.எஸ் தோனியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிக்ஸர் அடித்து வெற்றி பெறவைத்தார். இந்தப் போட்டியை நேரில் காணமுடியாமல் பலர் இருந்தபோது, கௌதம் கம்பீரின் மனைவி நடாஷா அதற்கான வாய்ப்பு கிடைத்தும் நிராகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதை தெரிவித்தது கௌதம் கம்பீர் தான். சமீபத்தில் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கம்பீர், "பாகிஸ்தானுக்கு எதிரான மொஹாலி போட்டியில் வென்ற பிறகு எனது மனைவியை 'நீ இறுதிப் போட்டிக்கு வர விரும்புகிறாயா?' என்று கேட்டேன். முதலில் யோசிக்க வேண்டும் என்று சொன்னவள், அடுத்த அழைப்பில் 'வருவது முக்கியமா. இது மற்றுமொரு கிரிக்கெட் போட்டி தானே. மும்பைக்கு பயணம் செய்வது சிரமம். என் அக்காவும் தம்பியும் வருவார்கள்' என்று கூறிவிட்டாள்.
பின்பு வெற்றிபெற்ற பிறகு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் செய்யப்படுவதை கண்டு ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள் எனக் கேட்டாள். 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்றுள்ளோம் என்ற பின்பே எனது மனைவிக்கு வெற்றி குறித்து புரிந்தது. இப்போது அவளிடம் இதுபற்றி கேட்டால் வாய்ப்பை நிராகரித்தற்காக வருத்தப்படுகிறார்" என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.