கொழும்பு: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு இலங்கையில் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடக்கவிருக்கிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கூட்டம் இன்று நடந்தது. இதில் ஆசியக் கோப்பை போட்டியை இந்த ஆண்டு டி20 பார்மெட்டாக நடத்த முடிவு செய்யப்பட்டதுடன், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை தொடரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் இந்தமுறை இலங்கையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 20-ல் இருந்து தொடங்கவுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2020-ல் கடைசியாக நடத்தப்பட இருந்தது. ஆனால் கரோனா தொற்றுநோய் அச்சம் காரணமாக 2020 தொடர் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஆசிய கோப்பையை பொறுத்தவரை 1984-ல் இத்தொடர் தொடங்கப்பட்டதில் இருந்து இந்திய அணி மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது. 1984, 1988, 1990/91, 1995, 2010 2016 மற்றும் 2018 உட்பட 14 முறை இதில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கடந்த முறை துபாயில் நடந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளது.