விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா

செய்திப்பிரிவு

ஆக்லாந்து: மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் ஆக்லாந்து மைதானத்தில் சந்தித்தன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்வுசெய்ய, அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்ய களம் கண்டது. இந்திய அணி ஓபனிங் சரியாக அமையவில்லை என்றாலும், மிடில் ஆர்டர் இந்த முறை கைகொடுத்தது. யஷ்டிகா பாட்டியா, கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது இந்திய அணி.

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலிய அணி, இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் முதல் மூன்று வீரர்களும் இந்திய பவுலர்களை சமாளித்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அந்த அணியின் அணியின் கேப்டன் மெக் லானிங் அதிரடியாக விளையாடி 107 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். இதேபோல், அலிசா ஹீலி 65 பந்துகளில் 72 ரன்களும், ரேச்சல் ஹெய்ன்ஸ் 43 ரன்களும் குவித்தனர். இறுதியாக கடைசி ஓவரில் 4 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா.

இதன்மூலம் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிகண்டு முதல் அணியாக 10 புள்ளிகளுடன் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலிய அணி. அதேநேரம், இந்திய அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி அதில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT