சென்னை: ஜெர்ஸி எண்ணாக 7-ம் நம்பரை தேர்வு செய்தது எப்படி என்பதை முன்னாள் கேப்டன் தோனி விவரித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவரின் பெயர் கூறும்போதே அவரின் இன்னொரு அடையாளமாக தோன்றுவது அவரின் ஜெர்ஸி எண் 7. சர்வதேச கிரிக்கெட் தொடங்கி ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடுவது வரை அவரின் ஜெர்ஸி எண் 7 தான். இது அவருக்கு ராசியானதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்கள் உடனான உரையாடலின்போது இந்த 7ம் நம்பரை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை விளக்கியுள்ளார் தோனி. அதில், "பலரும் எனக்கு 7 என்பது அதிர்ஷ்ட எண் என்று நினைக்கிறார்கள். அப்படியில்லை. இந்த எண்ணை தேர்வு செய்ததன் பின்னணி மிகவும் சிம்பிள். நான் ஜூலை 7ம் தேதி பிறந்தேன். 7வது மாதம் 7ம் தேதி என்பதால் அதையே தேர்வு செய்தேன்.
மக்கள் பலரும் இதை நியூட்ரல் எண். இது ராசியாக இல்லாவிட்டாலும், உங்களுக்கு எதிராக அமையாது என்பார்கள். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வேன். ஆனால், எனக்கு இதுபோன்ற மூடநம்பிக்கை இல்லை. அதேநேரம் இது என் இதயத்திற்கு நெருக்கமான ஓர் எண். அதனால், அதை தேர்வு செய்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹோலி பண்டிகையை முன்னிட்டு தனது பண்ணை வீட்டில் உள்ள அங்காடியை பொதுமக்களுக்காக மூன்று நாள்கள் தோனி திறக்கவுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. ஜார்க்கண்டின் சாம்போவில் அமைந்துள்ள தோனியின் 43 ஏக்கர் பண்ணை வீட்டில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார் தோனி. இங்கு இன்று முதல் மூன்று நாள்கள் பொதுமக்கள் சென்று காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாங்கலாம் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.