டி 20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் பிராத்வெய்ட் 4 சிக்சர்களை விளாசியது, ஐபிஎல்லில் அவர் இடம்பெற்றுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கார்லோஸ் பிராத்வெய்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் 4.2 கோடி கொடுத்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிராத்வெய்ட் 10 பந்துகளில் 34 ரன்களைக் குவித்ததும், கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை பறக்கவிட்டதும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. கடந்த சில ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணி சந்தித்த தோல்விகளை பிராத்வெய்ட்டின் வருகை மாற்றியமைக்கும் என்று அந்த அணியின் நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இதுகுறித்து டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான துவா கூறியதாவது:
டி 20 உலகக்கோப்பையில் பிராத்வெய்ட்டின் அதிரடி ஆட்டம் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. நாங்கள் 4.2 கோடி ரூபாய்க்கு பிராத்வெய்ட்டை வாங்கியபோது அவருக்காக ஏன் இத்தனை செலவு செய்தோம் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பிராத்வெய்ட் அதற்கு பதில் அளித்துவிட்டார். அவரது அதிரடி ஆட்டம் எங்கள் அணிக்கு ஆதரவாக ரசிகர்களை மைதானத்துக்கு வரவழைக்கும் என்று நம்புகிறேன்.
டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் பிராத்வெய்ட் மட்டுமின்றி கிரிஸ் மோரிஸ், நெகி, மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பல அதிரடி ஆட்டக்காரர்களும், ஜாஹிர் கான் போன்ற அனுபவசாலிகளும் உள்ளனர். இவர்களின் திறமையால் டெல்லி அணி வெற்றிகளைக் குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.