விளையாட்டு

'இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளை நடத்த ரெடி' - கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம்

செய்திப்பிரிவு

மெல்போர்ன்: "இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்த ஆர்வமாக உள்ளோம்" என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லே விருப்பம் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு அரசியல் சூழல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே உலகக் கோப்பை போட்டிகள் தவிர தனிப்பட்ட கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடப்பதில்லை. 13 வருடங்களுக்கு முன்பு இரு அணிகளும் தனிப்பட்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடர் 2007-ல் இந்தியாவில் நடந்தது. அப்போது பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது.

அதேநேரம், 2016-ல் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிக்காகவும் பாகிஸ்தான் அணி, இந்தியா வந்திருந்தது. அதன்பின் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினையில் பதற்றம் நிலவுவதால் எந்த விதமான கிரிக்கெட் தொடரும் திட்டமிடப்படவில்லை. சமீபத்தில் துபாயில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான், அதில் வெற்றியும் பெற்றது. இந்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் பாகிஸ்தான் பங்கேற்கலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லே, இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடரை நடத்த ஆர்வமாக உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முத்தரப்பு தொடர் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் தொடர். கடந்த காலங்களில் இந்த முத்தரப்பு தொடர் சிறப்பாக இருந்தது. தற்போதும் இரு நாடுகள் இடையேயான போட்டிகளை ஆஸ்திரேலியாவில் வைத்து நடத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளில் இருந்தும் மக்கள் அதிக அளவில் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றனர். எனவே இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியை நடத்த ஆர்வமாக உள்ளோம். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது உலக கிரிக்கெட்டில் அனைவரும் பார்க்க விரும்பும் ஒரு போட்டியாகும். எனவே அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த நினைத்தால் அதனை நாங்கள் செய்ய விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜனவரி மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமிஸ் ராஜா, பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகள் அடங்கிய டி20 தொடரை சுழற்சி முறையில் நடத்த வேண்டும் என்று முன்மொழிந்த நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா இப்படி ஒரு விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT