சென்னை: இந்தியாவின் ஆல் ரவுண்டர் கிரிக்கெட்டர் தீபக் சஹார் வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக பாதி போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தீபக் சஹாரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு வாங்கியது. கடந்த சில காலங்களாக பௌலராக மட்டுமில்லாமல் ஆல் ரவுண்டராக சஹார் தனது திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து, அவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகள் முனைப்பு காட்டின. இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு அவரை தக்கவைத்துக்கொண்டது. இதனிடையே, 26-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் தீபக் சஹார் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
சில தினங்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது தீபக் சஹார் காயமடைந்தார். தொடைப் பகுதியில் ஏற்பட்ட அந்தக் காயத்தில் இருந்து மீள எட்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டி உள்ளதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பிசிசிஐ தரப்பு அதிகாரி ஒருவரும் இந்த ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளார்.
"தீபக் சஹார் குறைந்தது எட்டு வாரங்களுக்கு கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. இதனால், அவர் ஐபிஎல் தொடரின் பாதி ஆட்டங்களை தவறவிட வாய்ப்புள்ளது" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் பேசியுள்ளார்.
இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் தீபக் சஹார். அவர் விளையாடாமல் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால், தீபக் சஹாருக்கு மாற்று வீரரை அந்த அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்குமா என்பது விரைவில் தெரியவரும்.