துபாய்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆல்-ரவுண்டராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா உலகின் நம்பர் 1 ஆல்-ரவுண்டராக தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
மொஹாலியில் இலங்கைக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட்டில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக 175 ரன்கள் விளாசியதுடன் ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். இதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, இந்தப் போட்டி மூலமாக சில சாதனைகளையும் தகர்த்திருந்தார் ஜடேஜா.
முதல் இன்னிங்ஸில் 7-வது வீரராக இறங்கி 175 ரன்கள் குவித்தன் மூலம் கபில்தேவ்வின் 35 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 1986-ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 7-வது வீரராக களமிறங்கி கபில் தேவ் 163 ரன்கள் குவித்திருந்தார். அதை முறியடித்து புதிய உச்சம் தொட்டார் ஜடேஜா.
இந்த அபார ஆட்டம் காரணமாக, இப்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக முன்னேறியுள்ளார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் முதலிடம் வகித்த நிலையில், அவரை முந்தி அந்த இடத்தை ஜடேஜா கைப்பற்றியுள்ளார். அதேநேரம், ஜேசன் ஹோல்டர் இப்போது இரண்டாவது இடத்திலும், தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதற்கிடையே, தனது 100-வது டெஸ்டில் விளையாடிய மற்றொரு இந்திய வீரர் விராட் கோலி, டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஐந்தாவது இடம் பிடித்தார். அவருக்கு அடுத்து 6வது இடத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார். இலங்கை டெஸ்டில் 96 ரன்களுக்கு விளாசிய இந்தியாவின் ரிஷப் பந்த் தவரிசையில் 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷாக்னே பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து இரண்டாமிடத்தையும், ஜஸ்பிரித் பும்ரா 10வது இடத்தையும் தக்கவைத்துள்ளனர்.