விளையாட்டு

இயற்கை மரணமே இது - ஷேன் வார்னின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

செய்திப்பிரிவு

பாங்காக்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. இதில் வார்ன் மரணம், இயற்கையான காரணங்களால் நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டுள்ளது.

தாய்லாந்து அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஷேன் வார்ன் இயற்கை மரணம் எய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக தாய்லாந்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிசானா பதானாசரோன் என்பவர் கூறும்போது, "இன்று தான் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் அதிகாரிகள் வார்னின் பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெற்றனர். மருத்துவர்கள் அதில், மரணம் இயற்கையாகவே நிகழ்ந்துள்ளது என்றுள்ளனர். வார்னுக்கு ஆஸ்துமா மற்றும் இதயப் பிரச்சினைகள் இருந்ததை ஏற்கெனவே அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியிருந்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையை காவல்துறை அதிகாரிகள் விரைவில் வழங்குவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் தாய்லாந்து போலீஸ் உதவி கமிஷனர் ஜெனரல் இந்த வழக்குத் தொடர்பாக பேசும்போது, "ஷேன் வார்னின் மரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அவரின் மரணத்தை சந்தேகப்படும்படியான அறிகுறிகள் எதுவும் இல்லை. பிரேத பரிசோதனையின் முடிவுகளை ஷேன் வார்னின் குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை முடிந்துள்ள நிலையில், இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வார்னின் இறுதிச் சடங்குகள் நடக்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஷேன் வார்ன் மரணம் அடைந்த பிறகு அவரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும்போது பாதுகாப்பு விதிமீறல் நடந்ததாக ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அவரின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றும்போது ஜெர்மன் பெண் ஒருவர் ஆம்புலன்ஸில் நுழைந்து, அங்கு தனியாக சில நிமிடங்கள் இருந்ததாகவும், அந்தப் பெண் பூக்கள் கொண்டுவந்து வார்னின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மீறல் குறித்து தாய்லாந்து போலீஸ் விசாரணை நடத்தியதில், அந்த ஜெர்மன் பெண்ணுக்கு ஷேன் வார்னை தனிப்பட்ட முறையில் தெரியும் என்பது தெரியவந்ததாகவும் அந்தத் தகவல் விவரிக்கிறது.

SCROLL FOR NEXT