பே ஓவல்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பெற்றுள்ளனர் இந்திய வீராங்கனைகள்.
நியூசிலாந்தில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. இம்முறை மிதாலி ராஜ் தலைமையில் களம்கண்டுள்ள இந்திய அணி லீக் ஆட்டத்தில் தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வி கண்டதில்லை. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் இந்தியாவே வெற்றியை சுவைத்துள்ளது என்பதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக ஆரம்பம் முதலே இருந்தது. டாஸ் வென்ற மிதாலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி கொடுத்தார் பாகிஸ்தான் வீராங்கனை டயானா பெய்க். இந்திய அணியின் அதிரடி மங்கை ஷெபாலியை, டயானா டக் அவுட் செய்ய இரண்டாவது ஓவரிலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஆனால், நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா இருவரும் மெதுமெதுவாக ரன்கள் சேர்த்தனர். 92 ரன்கள் என்ற நிலையில் பார்ட்னர்ஷிப் சேர்த்த இந்த கூட்டணியை நஷ்ரா சந்து பிரித்தார். தீப்தி சர்மா 40 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அடுத்த இரண்டு ஓவர்களிலேயே அரைசதம் கடந்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களுக்கு அவுட் ஆனார். இதன்பின் இந்திய அணி தடுமாற்றம் கண்டது. கேப்டன் மிதாலி, ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் என முக்கிய வீராங்கனைகள் ஒற்றை இழக்க ரன்களில் நிதா தர், நஷ்ரா சந்து பந்துகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வெளியேற, இந்திய அணியின் கதை அவ்வளவு தான் என்ற நிலை உருவானது. 114/6 என்ற நிலையில் களம் புகுந்தனர் பூஜா வஸ்த்ரகர் மற்றும் சினே ராணா.
இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்து வீழ்ந்து கிடந்த அணியை மீட்டெடுத்தனர். இருவரும் ஸ்ட்ரைக்கை புத்திசாலித்தனமாக ரொட்டேட் செய்து இரண்டு, மூன்று ரன்களாகவும் மாற்றியதுடன், கிடைத்த லூஸ் டெலிவரிகளை எல்லைக் கோட்டுக்கு பறக்கவிட்டனர். இருவரும் 7வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 122 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்தனர்.
இவர்களின் ஆட்டம் திருப்புமுனை கொடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் நிதா தர், நஷ்ரா சந்து தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களம்புகுந்தது. சித்ரா அமீன், ஜவேரியா கான் இணை ஓரளவு துவக்கம் கொடுத்தாலும், ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக ராஜேஸ்வரி கெய்க்வாட், சினே ராணா என நமது சுழற்பந்து வீச்சாளர்கள் மெதுவாக பந்து வீசி பாகிஸ்தான் வீராங்கனைகளை சீரான இடைவெளியில் சாய்த்தனர்.
ராஜேஸ்வரி கெய்க்வாட், சினே ராணா மற்றும் சீனியர் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி இருவரும் சேர்ந்தே பாகிஸ்தானின் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 43 ஓவர்களிலேயே 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாகிஸ்தான் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பையில் நான்காவது ஆட்டத்தையும் வெற்றியாக்கிய இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை தனது சுழலால் வீழ்த்தினார். சினே ராணா மற்றும் சீனியர் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சர்வதேச பெண்கள் தினத்துக்கு இன்னும் ஒருநாள் உள்ள நிலையில் இந்திய வீராங்கனைகள் பெற்ற இந்த வெற்றி விளையாட்டு உலகில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை பயிற்சி போட்டியில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணி, முதல் ஆட்டத்திலும் வெற்றியை ருசித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.