புதுடெல்லி: "காயங்களும் அதிலிருந்து மீள்வது என்பதும் வலிமிகுந்தவை. என்னைப் பொறுத்தவரை வலிகளை கடந்து காயங்கள் எனக்கு ஓர் ஆசிர்வாதமாக இருந்தது" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஷ் ஐயர் பேசியுள்ளார்.
தற்போதைய இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரை ஸ்ரேயாஷ் ஐயர். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய அணியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். எதிர்காலத்தில் இந்திய அணியை வழிநடத்தும் திறன்கள் உள்ள இவர், கடந்த ஐபிஎல் சீசன்களில் டெல்லி அணியை நடத்தியதன் மூலம் அதன் நிரூபித்தார். ஆனால் கடந்த ஆண்டு அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறிய இடைவெளி ஏற்பட்டது. அது தோள்பட்டை காயம் காரணமாக அந்த இடைவெளி ஏற்பட்டது. காயத்தால் ஐபிஎல் தொடரின்போது ஸ்ரேயாஷ்க்குப் பதிலாக ரிஷப் பந்த் டெல்லி அணியை வழிநடத்தினார்.
காயத்தில் இருந்து ஸ்ரேயாஷ் திரும்பிய பின்பும், டெல்லி அணி நிர்வாகம் ரிஷப் பந்த்தை கேப்டனாக தொடர வைத்தது. மேலும், வரவிருக்கும் தொடரிலும் அவரையே கேப்டனாக நியமிக்கப்போவதாக அறிவித்ததால், ஸ்ரேயாஷ் டெல்லி அணியில் இருந்து வெளியேறி கொல்கத்தா அணிக்கு ரூ.12.25 கோடிக்கு சென்றார். தற்போது கொல்கத்தா அணியை வழிநடத்த உள்ளார்.
இதனிடையே, டெல்லி அணி ரிஷப் பந்தை கேப்டன் பதவியில் ரீடெய்ன் செய்தது தொடர்பாக பேசியுள்ள ஸ்ரேயாஷ் ஐயர், அதில் "காயம் தான் கடந்த வருடம் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மோசமான அடி. காயம் மட்டும் ஏற்படவில்லை என்றால் என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியிருக்க மாட்டார்கள். டெல்லி அணியை பொறுத்தவரை, 2019 மற்றும் 2020 சீசனில் கட்டமைத்த அணியின் பிரதிபலிப்பை கடந்த சீசனில் பார்த்திருக்கலாம். வீரர்கள் ஒருவரை ஒருவர் தங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்திருந்தனர். அதுவே எங்களுக்கு கைகொடுத்தது.
சில சமயங்களில் நாம் நினைக்கும் விஷயங்கள் சிறப்பாக நடக்கும். கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி 500 ரன்கள் வரை எடுக்க முடிந்தது. என் மீதும் எனது பேட்டிங் மீதும் உண்மையிலேயே நம்பிக்கையுடன் அந்த தொடரில் விளையாடினேன். மேலும் கேப்டனாகவும் சிறப்பாகவே தொடரின் ஆரம்பம் இருந்தது. ஆனால், அந்த காயம் அனைத்தையும் சீர்குலைந்தது. காயத்தால் ஏற்படும் இடைவெளிகள் ஒருபோதும் எளிதானது கிடையாது. ஏனென்றால், காயத்தில் இருந்து மீள்வது என்பது மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போல் இருக்கும்.
காயங்களும் அதிலிருந்து மீள்வது என்பதும் வலிமிகுந்தவை. என்னைப் பொறுத்தவரை வலிகளை கடந்து காயங்கள் எனக்கு ஒரு ஆசிர்வாதமாக இருந்தது. அதுவே என்னை ஒரு முழு வீரராக உணரவைத்தது. இதனால், காயத்தில் இருந்து குணமடைந்தது மட்டுமில்லாமல், புதிய வீரராக உருவெடுத்துள்ளேன். இனி எது நடந்தாலும் அது நல்லதாகவே நடக்கும் என்று காயங்கள் என்னை உணரவைத்துள்ளது" என்று சமீபத்திய ஃபார்ம் குறித்தும், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கும் வாய்ப்பையும் சுட்டி காண்பித்து பேசியுள்ளார்.