மாஸ்கோ: ரஷ்ய தேசிய அணி உட்பட அந்த நாட்டின் எந்த அணிகளும் உலக அளவில் கால்பந்து விளையாட்டு தொடர்களில் பங்கேற்க FIFA மற்றும் UEFA அமைப்புகள் இடைக்கால தடை விதித்துள்ளன. இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று FIFA அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 6-வது நாளை எட்டியிருக்கும் நிலையில், ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு கால்பந்து அணிகள் மற்றும் கிளப்புகள், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA மற்றும் ஐரோப்பிய கால்பந்தாட்ட நிர்வாகக் குழுவான UEFA.
இதுதொடர்பாக FIFA வெளியிட்டுள்ள அறிவிப்பில், "FIFA மற்றும் UEFA அமைப்புகள் இணைந்து ஆலோசனை நடத்தின. அதன்படி, ரஷ்யாவின் அனைத்து அணிகளையும், அது தேசிய அணியாக இருந்தாலும் சரி அல்லது கிளப் அணிகளாக இருந்தாலும் சரி FIFA மற்றும் UEFA அமைப்புகள் நடத்தும் போட்டி தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்கள் முன் உலகளாவிய கால்பந்து அமைப்பு, "ரஷ்ய கால்பந்து யூனியன்" என்ற பெயரில் ரஷ்ய தேசிய அணி அந்நாட்டைத் தாண்டி நடுநிலையான இடங்களில், அதன் தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி இல்லாமல் விளையாட அனுமதிக்கப்படும் என்று கூறியிருந்தது. மேலும் போலந்து, செக் குடியரசு போன்ற நாடுகள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரஷ்ய அணியை எதிர்த்து விளையாட மாட்டோம் என்று அறிவித்தது. ஆனால், அந்த நாடுகளை FIFA கண்டிக்கும் விதமாக ஆரம்பத்தில் பேசிய நிலையில், இப்போது அதற்கு மாறாக ரஷ்ய அணிக்கு தடை விதித்துள்ளது.
ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல கால்பந்து சங்கங்கள் ரஷ்யா உடன் விளையாட மறுப்பு தெரிவித்ததை அடுத்து, FIFA தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகிறது.
போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகள் மட்டுமில்லாமல் ஸ்வீடன், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து என பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விளையாட மறுத்துள்ளன. இந்த எதிர்ப்புகளால் FIFA எடுத்துள்ள இந்த திடீர் மாற்றம் வரவிருக்கும் உலகக் கோப்பையில் ரஷ்ய அணியை வெளியேற்றுவதற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது.