சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சென்னை, சேலத்தில் இரு கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தஅகாடமிகள் தொடங்கப்படும். இங்கு இருபாலருக்கும் பயிற்சிகள்வழங்கப்படும். முதலில் சென்னை, சேலத்தில் அகாடமிகள் தொடங்கப்படும். பின்னர் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளி நாடுகளிலும் அகாடமி தொடங்கும் திட்டம் உள்ளது.
சென்னையில் துரைப்பாக்கத்திலும், சேலத்தில் சேலம் கிரிக்கெட் அறக்கட்டளையிலும் அகாடமி செயல்படும்.
இந்த அகாடமியில் சேர www.superkingsacademy.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதுகுறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறும்போது, “நாங்கள் 50 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதற்கும் இதுவேசரியான வாய்ப்பாக இருக்கும்.அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த வசதிகளுடன், சூப்பர் கிங்ஸ் அகாடமி உயர்தர பயிற்சி வழங்கும்” என்றார்.
துரைப்பாக்கம் அகாடமியில் இரவிலும் விளையாடும் வகையிலான வெளியரங்கம், உள்ளரங்கம். பல்வேறு வகையான மைதானங்கள், உடற்பயிற்சி மையம், உணவகம் என நவீனவசதிகள் இருக்கும். அதேபோல, சேலம் அகாடமி சர்வதேச தரத்துடன் 16 ஏக்கர் பரப்பளவில் முழுஅளவிலான விளையாட்டு மைதானத்துடன் அமைய உள்ளது.
இங்கு அனுபவம் வாய்ந்த,பிசிசிஐ சான்றிதழ் பெற்றவர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.