விளையாட்டு

ஸ்ரேயாஷ் - ஜடேஜாவின் அதிரடி: இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி

செய்திப்பிரிவு

தர்மசாலா: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. லக்னோவில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை ருசித்த நிலையில் இன்று இரண்டாவது டி20 ஆட்டம், எழில்மிகு தர்மசாலா மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

அதன்படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி 183 ரன்கள் குவித்தது. சேஸிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் 16 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷனும் அவுட் ஆனார். அதேநேரம் ஸ்ரேயாஷ் ஐயர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் கைகொடுத்தனர். இறுதியில் ஜடேஜா அதிரடி காட்ட 17 பந்துகள் மீதம் இருந்த நிலையில் இலக்கை எட்டி இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

ஸ்ரேயாஷ் ஐயர் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்திருந்தார். ரவீந்திர ஜடேஜா 45 ரன்களும், சஞ்சு சாம்சன் 39 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT