புவனேஷ்வர்: தனது குழந்தையை சில நாட்கள் முன் இழந்த சோகத்துக்கு மத்தியிலும் பரோடா கிரிக்கெட் அணி வீரர் விஷ்ணு சோலங்கி ரஞ்சி டிராபியில் சதம் அடித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
வழக்கம்போல இந்த ஆண்டும் ரஞ்சி டிராபி பலம் இளம் திறமைகளை அடையாளம் காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த ரஞ்சி சீசனில் கவனிக்கவைத்தவர் இளம்வீரர் விஷ்ணு சோலங்கி. பரோடா அணியைச் சேர்ந்த விஷ்ணு, சண்டிகர் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் செஞ்சுரி அடித்து அசத்தினார். அவரின் செஞ்சுரி உதவியால் பரோடா அணி 398 ரன்கள் எடுத்து 230 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது வரிசை வீரராக களமிறங்கிய விஷ்ணு 161 பந்துகள் சந்தித்து 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்திருந்தார்.
மற்ற வீரர்கள் எடுப்பது போன்று விஷ்ணுவுக்கு இது வழக்கமான ஒரு சதம் கிடையாது. காரணம், அவரின் சோகமான சூழல். சில நாட்கள் முன்புதான் விஷ்ணுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சந்தோஷத்தில் அவரின் மொத்த குடும்பம் திகைத்திருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிதுகூட நீடிக்கவில்லை. பிறந்த சில மணிநேரங்களில் அவரின் குழந்தை உடல்நலக்குறைவால் இறக்க, மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. இந்தத் தருணத்தில் ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரில் விஷ்ணு பரோடா அணியுடன் பயிற்சியில் இருந்தார். பின்னர் குழந்தை இறப்பு குறித்து தெரிந்ததும், கதறி அழுத விஷ்ணு, விமானம் மூலம் வதோதரா சென்று தனது மகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.
இதன்பின் மூன்றே நாட்களில் அணியுடன் மீண்டும் இணைந்த விஷ்ணு, இந்தக் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் சதம் அடித்துள்ளார். அவரின் இந்த அர்ப்பணிப்பை தற்போது பலர் பாராட்டி வருகின்றனர். சவுராஷ்டிரா அணியின் விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சன் இதுதொடர்பாக, "என்ன ஒரு வீரர். நான் அறிந்த வகையில் மிகச் சிறந்த வீரர் விஷ்ணு. விஷ்ணுவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பெரிய சல்யூட். இதுபோன்ற சூழ்நிலையில் இவ்வளவு அர்ப்பணிப்பை கொடுப்பது எளிதானது அல்ல. விஷ்ணு நீங்கள் இன்னும் பல சதங்கள் விளாச வேண்டும். வெற்றி பெற வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல், பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிஷிர் ஹட்டங்கடி தனது பதிவில், "சில நாட்களுக்கு முன்பு பிறந்த மகளை இழந்த ஒரு கிரிக்கெட் வீரரின் கதையை அறிந்தேன். இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சில நாட்களிலேயே தனது அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். விஷ்ணு சோலங்கி ஒரு நிஜ ஹீரோ. அவர் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்" என்று தெரிவித்துள்ளார்.