தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் விளையாடி வரும் இந்தியாவின் விஜேந்தர் சிங் தனது 5-வது ஆட்டத்தில் பிரான்சின் மட்டியோஸி ராயருடன் இன்று மோதுகிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் முதன்முறையாக தொழில்முறை போட்டியில் கால்பதித்த விஜேந்தர் சிங் இதுவரை மோதியுள்ள 4 ஆட்டத்திலும் நாக்-அவுட் முறை யில் வெற்றி பெற்றிருந்தார்.
மட்டியோஸி ராயர் 44 ஆட்டங் களில் பங்கேற்று 14 வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 250 சுற்றுகளை சந்தித்துள்ள நிலையில் விஜேந்தர் 9 சுற்றுகள் மட்டுமே விளையாடி உள்ளார்.
விஜேந்தர் சிங், மட்டியோஸி ராயர் மோதும் ஆட்டம் இங்கி லாந்தின் ஸ்டிராப்ட் போர்டு காப்பர் பகுதியில் நடைபெறுகிறது. போட்டி தொடர்பாக விஜேந்தர் சிங் கூறும்போது, “தற்போது மோத உள்ள வீரர் பயந்த குணம் கொண்ட தோற்றமுடையவராக இல்லை. நான் பார்த்தவரையில் அவர் எளிதானவராக தெரியவில்லை.
கடினமான நேரத்தில் சண்டையிடுவது எப்படி என்பதை நன்கு தெரிந்துகொண்டுள்ளார். ராயர். மீண்டும் ஒரு ஆட்டத்தை என்னால் முடிந்தவரை வெற்றியில் முடிக்க முயற்சி செய்வேன். ஆனால் இந்த ஆட்டம் நான் மோதிய மற்ற ஆட்டங்களை விட நீண்ட நேரம் நடைபெறும் என்று நினைக்கிறேன்" என்றார்.
மட்டியோஸி ராயர் கூறும் போது, “விஜேந்தர் சிங்கின் அமெச்சூர் போட்டிகள், தொழில் முறை போட்டிகள் குறித்து அதிக அளவில் கேள்விப்பட்டுள்ளேன். எங்களுக்கு இடையேயான ஆட்டம் வலுவான போட்டியாக இருக்கும். விஜேந்தருக்கு சோதனையான தருணத்தை கொடுக்க முழு அளவில் தயாராக உள்ளேன். மேலும் அவரது தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
இந்த போட்டியை இன்று இரவு 10.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2 சானலில் கண்டு களிக்கலாம்.