கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி, ரிஷப் பந்த் தலா 52 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படாத நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர் அணியில் இடம்பிடித்தார்.
ரோஹித், இஷான் இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் இரண்டாவது ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்கம் முதலேதடுமாறி கொண்டிருந்த இஷான் கிஷன், கார்டெல் ஓவரில் இரண்டே ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து களம்புகுந்தார் விராட் கோலி. கடந்த சில போட்டிகளாக ஃபார்ம் அவுட்டில் இருந்த விராட் கோலி இந்த முறை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். முதல் பந்தை பவுண்டரியுடன் துவங்கிய கோலி அதிரடி காட்டினார். மறுமுனையில் கேப்டன் ரோஹித், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் 19 ரன்களில் சேஸ் பவுலிங்கில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 8 ரன்கள் எடுத்தவாறு வந்த வேகத்தில் அதே சேஸ் பவுலிங்கில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
தனியாக போராடி கொண்டிருந்த கோலிக்கு, ரிஷப் பந்த் கைகொடுத்தார். இதனால் பல போட்டிகள் கழித்து அரைசதம் கடந்த நிலையில் 52 ரன்களில் விராட் கோலி சேஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின் தான் இந்தியாவின் ஆட்டம் சூடு பிடித்தது. கோலியை போலவே பவுண்டரியுடன் இன்னிங்ஸை துவக்கிய ரிஷப் பந்த்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர். இருவரும் மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர்களின் பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்தனர். கடைசி ஓவரில் தான் இந்தக் கூட்டணியை பிரிக்க முடிந்தது. இருவரும் 35 பந்துகளில் 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலமாக சேர்த்த நிலையில், கடைசி ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில், இந்தியா 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 52 ரன்கள் சேர்த்து அவுட் ஆகாமல் இருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஆல் ரவுண்டர் சேஸ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.