சென்னை: சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்யாததற்கான காரணத்தை விளக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், அவரை நிறைய மிஸ் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
இதுவரை 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1 சதம், 39 அரைசதங்கள் உட்பட 5,528 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ள சுரேஷ் ரெய்னாவை இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் இவரை வாங்க முன்வரவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. ஐபிஎல்லில் அதிக ரன்கள் உட்பட பல சாதனைகளை புரிந்த ரெய்னாவை யாரும் எடுக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ் ரசிகர்கள் 'மிஸ்டர் ஐபிஎல்' என்ற ஹேஷ்டேக்குடன் ரெய்னாவை எடுக்காத வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல், சென்னை அணி நிர்வாகம் தொடர்பாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரெய்னாவை சென்னை அணி தேர்வு செய்யாத காரணங்களை விளக்கியுள்ளார் அணியின் காசி விஸ்வநாத். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "கடந்த 12 ஆண்டுகளாக சென்னை அணியின் முக்கிய வீரராக, தொடர்ந்து ரன்களை குவிக்கும் ஒரு வீரராக ரெய்னா திகழ்ந்தார். நிச்சயமாக, ரெய்னாவை எடுக்க முடியவில்லை என்பது எங்களுக்கு வருத்தமே. ஆனால் அதே நேரத்தில் ஓர் அணிக்கு என்ன தேவையோ அதை முன்னிறுத்தியே ஏலத்தில் செயல்பட முடியும்.
அணியின் தேவையே, எல்லாத்தையும் விட முதன்மையானவை. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எங்களின் உத்தேச அணியில் ரெய்னாவின் தேவை இல்லை என்பதாலேயே அவரை வாங்கவில்லை. ஏலத்தின் செயல்முறையே இத தான். ஆனால், நிச்சயம் ரெய்னாவை மிஸ் செய்வோம். அதேபோல் பத்து ஆண்டுகள் எங்களுடன் இருந்த ஃபாஃப் டுபிளசிஸையும் இழந்தது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.