பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்று தொடங்கியவுடன் முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலம் தொடங்கியவுடனேயே ஷிகர் தவானின் பெயர் தான் முதலில் வாசிக்கப்பட்டது. பஞ்சாப் அணி அவரைப் போராடி ஏலத்தில் எடுத்துள்ளது. தவானை ஏலத்தில் எடுக்க கடும் போட்டா போட்டி நிலவியது. கடந்த முறையும் ஏலத்தில் ஷிகர் தவானின் பெயர்தான் முதலில் ஏலத்தில் வாசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அடேங்கப்பா! - ரூ.9.25 கோடிக்கு ரபாடாவை ஏலத்தில் அள்ளியது பஞ்சாப் கிங்ஸ்: தென் ஆப்பிரிக்க மீடியம் பேசர் காகிசோ ரபாடாவை ரூ.9.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு ஏலம் அடுத்த பஞ்சாப் அணி, அடுத்ததாக ரூ.9.25 கோடிக்கு தென் ஆப்பிரிக்க மீடியம் பேசர் காகிசோ ரபாடாவை ஏலத்தில் எடுத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் ஏலத்தில் அதிக இருப்புத் தொகையாக ரூ.72 கோடி வைத்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் கை ஓங்கும் என்று கூறப்பட்டதற்கு இணங்க இதுவரை இரு வீரர்களை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது அந்த அணி. இதற்கிடையில், ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை, ரூ.7.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்றும், நாளையும் (பிப்.12, 13) பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கான வீரர்கள் பர்ஸை பதம் பார்க்க மாட்டார்கள் என்றும், எல்லா எதிர்பார்ப்பும் இரண்டு புதிய அணிகளின் மீதே குவிந்திருக்கிறது என்றும் கள நிலவரம் தெரிவிக்கிறது.
ஐபிஎல் அணிகளிடம் உள்ள ஏல இருப்புத் தொகை விவரம்:
பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ரூ.72 கோடி
சன்ரைஸர் ஹைதராபாத் (SRH): ரூ.68 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ரூ.62 கோடி
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): ரூ.59 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ரூ.57 கோடி
குஜராத் டைட்டன்ஸ்:ரூ.52 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரூ.48 கோடி
கொல்த்தா நைட் ரைடர்ஸ் (KKR):ரூ.48 கோடி
மும்பை இந்தியன்ஸ் (MI):ரூ.48 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் (DC): ரூ.47.5 கோடி