விளையாட்டு

ஐபிஎல் 2022 மெகா ஏலம் முன்னோட்டம்: கவனம் பெறும் அணிகள், வீரர்கள் யார் யார்?

செய்திப்பிரிவு

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்றும், நாளையும் (பிப்.12, 13) பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கான வீரர்கள் பர்ஸை பதம் பார்க்க மாட்டார்கள் என்றும், எல்லா எதிர்பார்ப்பும் இரண்டு புதிய அணிகளின் மீதே குவிந்திருக்கிறது என்றும் கள நிலவரம் தெரிவிக்கிறது.

ஏலத்தில் எத்தனை வீரர்கள்: ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இடம் பெறுகின்றன. இதற்கிடையே ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1,214 வீரர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இதன்படி ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் 228 சர்வதேச வீரர்களும், சர்வதேச கிரிக்கெட் டில் விளையாடாத 355 வீரர்களும் அடங்குவர். இதில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.

ரூ.25 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை: வீரர்களின் பேஸ் ரேட் எனப்படும் அடிப்படை ஏலத் தொகை ரூ.25 லட்சம் தொடங்கி ரூ.2 கோடி வரை நீள்கிறது. 48 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ.2 கோடியாக உள்ளது. 20 பேருக்கு ரூ.1.50 கோடி அடிப்படை விலை உள்ளது.

கவனம் பெறும் வீரர்கள்: மெகா ஐபிஎல் ஏலம் 2022ன் மைய ஈர்ப்பு வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான், தீபக் சஹார், ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், இஷான் கிசன், தீபக் ஹூடா, யுவேந்திரா சாஹல், ராகுல் சாஹர், ஹர்ஷல் படேல் ஆகியோர் உள்ளனர்.

அணிகள் வசம் உள்ள ஏலத் தொகை எவ்வளவு? - ஐபிஎல் அணிகளிடம் உள்ள ஏலத் தொகை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி.,

பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ரூ.72 கோடி
சன்ரைஸர் ஹைதராபாத் (SRH): ரூ.68 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ரூ.62 கோடி
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): ரூ.59 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ரூ.57 கோடி
குஜராத் டைட்டன்ஸ்:ரூ.52 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரூ.48 கோடி
கொல்த்தா நைட் ரைடர்ஸ் (KKR):ரூ.48 கோடி
மும்பை இந்தியன்ஸ் (MI):ரூ.48 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் (DC): ரூ.47.5 கோடி

மெகா தொகை இவர்களுக்குத் தான்: ஐபிஎல் ஏலத்தில் 10 வீரர்கள் மெகா தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர், பேட் கியூமின்ஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. இவர்களை ஏலத்தில் எடுக்க ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மத்தியில் கடும் போட்டாபோட்டி நிலவுகிறது.

SCROLL FOR NEXT