பந்து வீசாமலேயே ரன்னர் முனையில் இருக்கும் பேட்ஸ்மெனை ரன் அவுட் செய்வது சரியே என்கிறார் இந்திய ஸ்பின்னர் முரளி கார்த்திக்.
இந்து ஆங்கில நாளிதழில் அவர் கூறியதாவது: நியாயமான இவ்வகை அவுட்களை கேள்வி கேட்க உடனே கிரிக்கெட் ஆட்ட உணர்வு என்பது மிகவும் வசதியான பதுங்கு குழியாகி விட்டது. கிரிக்கெட் உணர்வு என்பது என்ன? ஏமாற்றவோ, சக வீரரை வசை பாடுவதோ, கேலி செய்வதோ கூடாது, இதுதான் கிரிக்கெட் ஆட்ட உணர்வு. ஆனால் பந்து வீசும் முன்னரே கிரீஸை விட்டு வெகுதூரம் முன்னேறிச் சென்று ரன்களை சுலபமாக ஓடும் விஷயத்தை முறியடிப்பது எப்படி கிரிக்கெட் உணர்வுக்கு எதிரானதாக ஆகும்?
இவ்வாறு அவுட் செய்யலாம் என்று விதிமுறைத் தெள்ளத் தெளிவாகக் கூறும்போது நடுவர்கள் கேப்டனிடம் இந்த முறையீடைத் தக்கவைக்கிறீர்களா? வாபஸ் பெறுகிறீர்களா என்று கேட்பது தவறு. கேப்டன் முறையீடை வாபஸ் பெற்றால் ரன் அவுட் செய்த பவுலர் முட்டாளாக்கப்படுகிறார். கிரிக்கெட் ஆட்ட உணர்வு என்பது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் ஆகிவிட்டது.
டாண்டனில் பாரோ என்ற வீரரை நான் ரன் அவுட் செய்வதற்கு முன்பு எச்சரித்தேன். டெல்லியில் தாஸ் என்ற வீரரை இரு முறை எச்சரித்தேன். ஆனால் தொடர்ந்து கிரீஸை விட்டு மிகவும் முன்னேறினர். நேரடியாக ஒரு த்ரோ ஸ்டம்பில் படும்போது ரன் அவுட் என்பது சிக்கலாகிவிடும். ஏனெனில் நியாயமாக ஓட முடியாத ரன் கூட ஓட முடிவதாகிவிடுகிறது.
கிரிக்கெட் விதிமுறைகள் பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது பவுண்டரிகளையும், சிக்சர்களையும் அதிகரிக்க! குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் எல்லைக்கோடும் முன்னால் நகர்த்தப்படுகிறது. இதெல்லாம் பவுலர்களுக்கு எதிரான மாற்றங்களே" இவ்வாறு கூறியுள்ளார் முரளி கார்த்திக்.