விளையாட்டு

IND vs WI 3rd ODI | சரிந்த டாப் ஆர்டர்; ரிஷப் - ஸ்ரேயாஷ் துணையுடன் இந்தியா 265 ரன்கள் சேர்ப்பு

செய்திப்பிரிவு

குஜராத்: அகமதாபாத் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஷ் ஐயர் உறுதுணையுடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கே.எல்.ராகுல், சஹால் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஷிகர் தவான், தீபக் சஹார் மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர்.

இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு ஓபனிங் சரியாக அமையவில்லை. அந்தச் சோதனை, இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. ஆட்டத்தின் நான்காவது ஓவரை வீசிய அல்ஜாரி ஜோசப் பவுலிங்கில் அடுத்தடுத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அவுட் ஆகினர். ரோஹித் 13 ரன்களில் அவுட் ஆன நிலையில், விராட் கோலியோ ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். சிறிதுநேரம் தாக்குப் பிடித்த ஷிகர் தவானும் 10 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாறியது.

ரிஷப் பந்த், ஸ்ரேயாஷ் ஐயரும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும், சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ரிஷப் பந்த் 56 ரன்களில் வால்ஷ் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஸ்ரேயாஷ் ஐயரும் 80 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இதன்பின் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சஹார் இருவரும் முறையே 33 ரன்கள் மற்றும் 38 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது இந்திய அணி.

மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 4 விக்கெட்களையும், ஜோசப், வால்ஷ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு வெற்றிகூட பெறாத மேற்கிந்திய தீவுகள் அணி ஆறுதல் வெற்றிபெற 266 ரன்கள் இலக்கை துரத்தவுள்ளது.

SCROLL FOR NEXT