விளையாட்டு

ஏலத் தொகையை வைத்து நான் வீரர்களை எடைபோடுவதில்லை: ராகுல் திராவிட்

பிடிஐ

ஐபிஎல் ஏலத்தில் வீரர் என்ன விலை போகிறார் என்பதை வைத்து அவரது திறமைகளை தான் எடைபோடும் வழக்கமில்லை என்று டெல்லி டேர் டெவில்ஸ் நம்பிக்கை அறிவுரையாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் பவன் நேகி ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ராகுல் திராவிட், “வீரர்களை அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை வைத்து நான் ஒருபோதும் எடைபோடுவதில்லை. ஒரு ஏலம் எப்படி வேலை செய்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். ஏலத்தில் ஒரு வீரர் ஏலம் எடுக்கப்படும் தொகை அவரது திறமை குறித்த அளவீடு அல்ல.

ஏலத்தில் விலைகள் ஒருவரது கட்டுப்பாட்டிலும் இல்லை. ஒரு வீரருக்கு அதிக தொகை கிடைத்து விட்டது என்பதால் அணி உரிமையாளர் மற்ற வீரர்களை விட இவர் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதுகிறார் என்று அர்த்தமல்ல.

ஏலத்தின் தொழிற்பாடுகளை விளக்குவது கடினம். ஒரு வீரர் எந்த அடிப்படையில் ஏலம் எடுக்கப்படுகிறார், மற்ற அணி உரிமையாளரின் தேவை என்ன போன்றவற்றை விளக்குவது கடினம். ஒரு வீரர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை வைத்து அவர் தேர்வு செய்யப்படுவதில்லை, ராஜஸ்தான் ராயல்ஸில் அவ்வாறு செய்யப்பட்டதில்லை.

சில வேளைகளில் மற்ற வீரருக்கு சிறந்த பங்கிருப்பதாக கருத நேரிடும் போது நல்ல வீரர்கள் விளையாட வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஏன் ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்? சரி. நான் இதனை ஒரு உதாரணத்திற்காக எடுத்துக் கொள்கிறேன். திரைக்குப் பின்னால் நிறைய பரிசீலனைகள், யோசனைகள் உள்ளன, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளின் கீழ் வீரர்களின் திறமை, சரியான வீரரைத் தேர்வு செய்வது என்பதெல்லாம் உள்ளன.

நான் நிறைய ஏலத்திற்கு எனது விருப்பப் பட்டியலுடன் சென்றிருக்கிறேன், ஆனால் கடைசியில் எனது விருப்பப் பட்டியலுக்கு நெருக்கமாக எதுவும் அமைந்ததில்லை.

ஏன் ஒரு போட்டிக்கான 11 வீரர்களை தேர்வு செய்வதிலும் நிறைய விஷயங்கள் உள்ளன. எங்களிடம் 7-8 சர்வதேச வீரர்கள் உள்ளனர். அவர்கள் நன்கு விளையாடக்கூடியவர்கள் என்றாலும் நமது டாப் 4 அயல்நாட்டு வீரர்கள் பட்டியலில் அவர்கள் இருக்க மாட்டார்கள். அயல்நாட்டு வீரரிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே விளையாடும் 11 வீர்ர்கள் தேர்வு அமையும்” என்றார்.

இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய திராவிட் "இந்தியாவுக்கு விளையாடுவது தங்கப்பதக்கம், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவது வெள்ளிப்பதக்கம்" என்றார்.

SCROLL FOR NEXT