விளையாட்டு

'ஷாருக்கானை யாரென்றே தெரியாது' - ஹேமர்மேன் ரிச்சர்டு மேட்லியின் அனுபவ பகிர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ஐ.பி.எல் ஏலத்தை நடத்தும் ஹேமர்மேன் ரிச்சர்டு மேட்லி இத்தனை வருட ஏல அனுபவம் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். ஒருமுறை பாலிவுட் நடிகர் ஷாருக்கானை யார் என்று தெரியாமல் திகைத்தது போன்ற பல சுவாரஸ்ய சம்பவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் பெங்களூருவில் நடக்கும் ஏலம் மூலமாக ஐ.பி.எல் ஃபீவர் தொடங்கவுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஐ.பி.எல் ஏலத்தை நடத்தி வந்த ஹேமர்மேன் ரிச்சர்டு மேட்லி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உடனான உரையாடலில் இத்தனை ஆண்டுகால ஐ.பி.எல் ஏல அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். ஒருமுறை, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை யார் என்று கேட்டது உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில், "கொல்கத்தா அணிக்கான ஏலம் முடிந்த பிறகு ஒரு பத்திரிகையாளர் என்னிடம் வந்து ஷாருக்கான் உடன் அறையில் இருப்பது எப்படி இருந்தது என்று கேட்டார். எனக்கு அது யார் என்று தெரியவில்லை. பின்னர் ஷாருக்கான் யார் என்று விசாரித்தேன். உண்மையாகவே அப்போது எனக்கு அப்போது அவரை தெரியாது. பாலிவுட் உலகம் எனக்கு முற்றிலும் புதியது. இது ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியாவின் பாலிவுட் நட்சத்திரங்கள், மல்டி பில்லியனர்கள் அனைவரையும் தெரிந்துகொண்டு ஏலம் விடுவது சிறப்பாக இருக்காது. அவர்களை தெரியாமல் இருந்து அனைவரையும் சமமாக நடத்தினேன்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிக ஏலம் போன வீரர்களிடம் இருந்துதான் எந்த தொகையையும் பெறவில்லை என்பதையும் பேட்டியில் தெரிவித்திருந்தார் ரிச்சர்டு மேட்லி. "வீரர்கள் எனக்கு ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. முன்னாள் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் எனக்கு ஒரு பீர் வாங்கி கொடுத்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கிரிக்கெட் விழாவில் பென் ஸ்டோக்ஸ் எனக்கு ஒரு கோப்பை தேநீர் வாங்கித் தர முன்வந்தார். கோடீஸ்வரர்களாக உருவாக்கிய அந்த கிரிக்கெட் வீரர்களிடமிருந்து நான் பெற்றதெல்லாம் இதுதான். இதைத் தவிர, எந்த கிரிக்கெட் வீரரும் தங்களை மில்லியனர்களாக்க எந்த ஊக்கத்தொகையையும் வழங்கவில்லை" என்று குறிப்பிட்டார் ரிச்சர்டு மேட்லி. ரிச்சர்டு மேட்லி இந்த வீடியோ பேட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT