புதுடெல்லி: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஐந்தாவது முறையாக பட்டம் சூடியிருக்கிறது இந்திய அணி. 2000-ம் ஆண்டு முகமது கைஃப், 2008-ல் விராட் கோலி, 2012-ல் உன்முகுந்த் சந்த், 2018-ல் பிரிதிவி ஷா ஆகிய நான்கு கேப்டன்கள் தலைமையில் இந்திய கிரிக்கெட் ஐ.சி.சி யு-19 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த நான்கு அணிகளும் சந்திக்காத வேதனையை, வலிகளைக் கடந்து இந்தமுறை யஷ் துல் தலைமையிலான இந்திய யு19 அணி வெற்றிவாகை சூடியுள்ளது.
வீரர்கள் சந்தித்த முக்கிய சவால் கரோனா தொற்று. தென்னாப்பிரிக்காவை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை நம்பிக்கையுடன் தொடங்கிய இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் கரோனா வில்லனாக உருவெடுத்தது. அயர்லாந்திற்கு எதிரான போட்டிக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்திய அணி கேப்டன் யஷ் துல், துணை கேப்டன் ஷேக் ரஷீத், ஆராத்யா யாதவ், மானவ் பராக் மற்றும் சித்தார்த் யாதவ் ஆகிய வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதேபோல் வசு வாட்ஸ்க்கு அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் 10 வீரர்கள் மட்டுமே அயர்லாந்திற்கு எதிராக விளையாட உடல் தகுதியுடன் இருந்தார்கள். பதினொன்றாவது வீரராக வேறுவழியில்லாமல் காயத்தில் இருந்த கவுதம் அணிக்கு அழைக்கப்பட்டார். ஸ்டேடியத்திற்கு புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்து அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் இந்தியா 307 ரன்கள் குவித்ததுடன், அயர்லாந்தை 40 ஓவர்களுக்குள் வெறும் 133 ரன்களுக்குள் சுருட்டியது. அடுத்து உகாண்டாவுக்கு எதிரான போட்டியில் 405 ரன்கள் ஸ்கோர் செய்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் அணியின் உதவிப் பயிற்சியாளர்கள்தான் வீரர்களுக்கு ட்ரிங்க் பாய்களாக பணியாற்றியனர். அதேபோல், அணியின் மேனேஜர் கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வேறு நகரத்தில் இருந்துகொண்டே தொலைபேசி மூலமாக அணிக்கு தேவையானதை செய்தார். அவருக்கு பதிலாக வீடியோ ஆய்வாளர் அணியின் மேலாளர் பொறுப்பை செய்தார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை இரட்டிப்பாக்கி கொண்டு வேலை செய்தனர்.
அயர்லாந்து மற்றும் உகாண்டாவுக்கு எதிராக இந்தியாவை அற்புதமாக வழிநடத்திய சித்துவும் கரோனா பிடியில் இருந்து தப்பவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான காலிறுதிக்கு ஒரு நாள் முன்பு அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. கரோனா பாதிப்பு, வீரர்களை மனரீதியாக வெகுவாக பாதித்தது. துணைக் கேப்டன் ஷேக் ரஷீத், ஒருகட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக மனமுடைந்து தன் பயிற்சியாளருக்கு போன் செய்து "எனது உலகக் கோப்பை கனவு முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்" அழுதுள்ளார். அவரைத் தேற்றிய அந்த பயிற்சியாளர், இந்த நிலையை கொண்டுவர அவரின் தந்தையின் உழைப்பை நினைவுபடுத்தியுள்ளார்.
இந்த கிரிக்கெட் கனவுக்காக ரஷீத்தின் தந்தை பவுலிஷா பல வேலைகளை இழந்ததும், தனது சொந்த நகரத்தை விட்டு வேறு இடத்துக்கு குடிபெயர்ந்த விஷயங்களை அவரை ஊக்கப்படுத்தியுள்ளார். அவரின் ஊக்கத்தால் மீண்டுவந்த ரஷீத், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 94 ரன்களும், இறுதிப் போட்டியில் 50 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். | வாசிக்க > தினமும் 40 கி.மீ பயணம், வேலையிழப்பு... - தந்தையின் அர்ப்பணிப்பால் U -19 உலகக் கோப்பையில் சாதித்த ஷேக் ரஷீத் |
இவரைப் போல வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் ஆல் ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். உலகக் கோப்பை தொடரில் திறமையான வேகப் பந்துவீச்சாளராக மட்டுமில்லமல் பேட்டிங்கில் அதிக தூர சிக்ஸர்களை விளாசி எதிரணிகளை கலங்கடித்தவர். இவர் சில மாதங்கள் முன்புதான் கரோனா தொற்றுக்கு தனது தந்தையை இழந்திருந்தார். இந்த சோகத்தால் நிலைகுலைந்திருந்த அவரை மும்பை பயிற்சியாளர் ஜாதவ் தான் மீட்டுக் கொண்டுவந்து அவரின் கவனத்தை கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளார்.
இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டெல்லியை சேர்ந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி. டெல்லி பூர்வீகம் என்றாலும், சில ஆண்டுகள் முன் அங்கிருந்து வெளியேறி மும்பைக்கு குடிபெயர்ந்தது அவரின் குடும்பம். இதற்கு பின்னணியில் அவரின் சகோதரரின் உடல்நிலை முக்கிய காரணமாக உள்ளது. அவரது சகோதரர் கிரிஷாங், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். அவரின் சிகிச்சைக்காக மும்பைக்கு இடமாறியுள்ளனர். அங்கிரிஷும் அவரின் சகோதரரும் மிக நெருக்கம். இதனால், கிரிஷாங்கின் சிகிச்சையின் செயல்முறை சில ஆண்டுகளாக அங்கிரிஷை கடுமையாக பாதித்துள்ளது.
அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்ட அங்கிரிஷ் கிரிக்கெட் பயிற்சியை வழக்கப்படுத்தி கொண்டுள்ளார். பயிற்சியை முடித்தபின் தனது சகோதரனை காண தினமும் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். கிரிஷாங் சிகிச்சைக்கே அவரின் குடும்ப வருமானம் சரியாக இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வறுமைக்கு மத்தியிலும் விடாது உழைத்து கிரிக்கெட்டில் தற்போது சாதனை படைத்து தனது குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளார் அங்கிரிஷ்.
இப்படி இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வீரர்களும் களத்திற்கு வெளியே பல சவால்களை எதிர்கொண்டாலும், ஒற்றுமையாக இருந்து அசாத்திய திறமையை வெளிப்படுத்தி, கோப்பையை இந்தியா வசமாக்கியுள்ளனர். இதனால்தான் மற்ற வெற்றிகளைக் காட்டிலும், இந்த வெற்றி தனித்து நிற்கிறது.