குண்டூர்: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மூலம் புதிய ஸ்டாராக உருவெடுத்துள்ள ஷேக் ரஷீத்தை ஆந்திர இளைஞர்கள் வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர். நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற காரணமாக இருந்த ரஷீத்தின் பின்புலம் பற்றிய தொகுப்பு இது.
ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்தவர் ஷேக் பாலிஷாவலி. இந்தியாவில் அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டாக கிரிக்கெட் இருந்தாலும், பாலிஷாவலிக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், அவர் குண்டூர் நகரில் இருந்து 40 கி.மீ பயணம் செய்து மங்களகிரிக்கு அருகிலுள்ள கிரிக்கெட் அகாடமிக்கு தினமும் செல்வது வழக்கம். அது அவருக்காக அல்ல. அவரின் மகன் ஷேக் ரஷீத்தின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அந்த இரண்டு மணிநேர பயணத்தை தினமும் செய்தார் பாலிஷாவலி. கிரிக்கெட் அகாடமிக்கு வரும் சக பெற்றோர்கள் பாலிஷாவலியை பார்க்கும் போதெல்லாம் கேட்பது 'உங்க பையன் பொறக்கும்போது எந்த பெரிய மனுஷனும் இறந்துவிட்டார்களா?' என்பதுதான்.
ஏன், அவர்கள் இப்படி கேட்கிறார்கள் என பாலிஷாவலிக்கு முதலில் புரியவில்லை. ஆனால் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக தனது மகன் ஷேக் ரஷீத் அறிவிக்கப்பட்டபோதுதான் அவர்கள் அப்படி கேட்டதற்கான அர்த்தம் தெரிந்துள்ளது. அவர்கள் கேட்டது கேலியாக இல்லை, ரஷீத்தை உயர்வாக நினைத்தே அப்படி கேட்டுள்ளனர் என்பது பாலிஷாவலிக்கு அப்போதே புரிந்தது. அந்த கிரிக்கெட் அகாடமியில் மற்ற பிள்ளைகளை காட்டிலும், ரஷீத் சிறப்பாக விளையாட கூடியவர். இதனால் பெற்றோர்கள் மத்தியிலும் வெகு சீக்கிரமாகவே ரஷீத் பிரபலமாகியுள்ளார்.
இயல்பாகவே சிறுவயது முதலே ரஷீத்துக்கு கிரிக்கெட்டில் ஆர்வம். இந்த ஆர்வத்தை நேரில் கண்ட பாலிஷாவலியின் நண்பர்கள் சிலர் அவரை கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிடச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் குண்டூரில் பெரிய கிரிக்கெட் அகாடமி கிடையாது. குண்டூரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள மங்களகிரிக்கு அருகே ஆந்திர கிரிக்கெட் சங்கம் நடத்திவந்த கிரிக்கெட் அகாடமி குறித்து கேள்விப்பட்டு மகனை அதில் சேர்த்துவிட்டார். தினமும் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்லவேண்டிய நிலை. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரேநபர் பாலிஷாவலி மட்டுமே. அருகில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் கூலி வேலைச் செய்துவந்த அவர், தினமும் அதிகாலை அவ்வளவு தூரம் பயணம் செய்து மகனை கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள வைத்தார்.
தினமும் 40 கிமீ சென்றுவர மூன்று மணிநேரத்துக்கும் மேல் ஆகிவிடும். இது அவருக்கு வேலை ரீதியான சிக்கலை ஏற்படுத்தியது. பணிக்கு தினமும் தாமதமாக செல்ல, ஒருகட்டத்தில் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகனுக்கு உதவுவதற்காக அவரது தந்தை இரண்டு முறை வேலையை இழந்தாலும், மகனின் பயிற்சிக்கு தடை ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டார். எனினும், சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக சந்தித்த பிரச்சனைகளால் ரஷீத் கிரிக்கெட் பயிற்சியை தொடரமுடியவில்லை. இந்த சமயத்தில் ஒருமுறை ரஷீத்தின் திறமையை கண்ட பாலிஷாவலியின் பழைய நண்பர் கிரிக்கெட் பயிற்சிக்கான முழுசெலவுகளை ஏற்றுக்கொள்ளவே நிதி பிரச்னை தீர்ந்தது.
இதன்பின் அன்றில் இருந்து இன்றுவரை ரஷீத் கிரிக்கெட்டில் சாதனை படைத்துவருகிறார். 2018-ல் நடந்த விஜய் மெர்ச்சன்ட் அண்டர்-16 டிராபியில் ஆறு ஆட்டங்களில் விளையாடி, 674 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு டபுள் செஞ்சுரியும் அடக்கம். கடந்த ஆண்டு நடந்த வினு மன்கட் அண்டர்-19 கோப்பை தொடரில் ஆறு ஆட்டங்களில் 75.2 சராசரியுடன் 376 ரன்களைக் குவித்தார். இதில் இரு சதங்கள் அடங்கும். வங்கதேச அணியுடனான முத்தரப்பு தொடரில் இந்தியா U-19 கேப்டனாகவும் வழிநடத்திய அனுபவம் ரஷீத்துக்கு உள்ளது.
இப்படி, வினு மன்கட் டிராபி, சேலஞ்சர்ஸ் டிராபி மற்றும் வங்கதேச தொடர் என கடந்த ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் ரஷீத் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான அணியில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக் கோப்பையில் நேற்று முக்கியமான அரையிறுதியில் கேப்டன் யாஷ் துல்லுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை பைனலுக்கு தகுதிபெறவைத்துள்ளார் இந்த ரஷீத். நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய அணி 12.3 ஓவர்களில் 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த சமயத்தில்தான் கேப்டன் யாஷ் துல்லுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் ரஷீத்.
இருவரும் மொத்தமாக 33.2 ஓவர்கள் அவுட் ஆகாமல் நின்று 204 ரன்களை சேர்த்தது. இதனால் இந்தியா 290 என்கிற மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க முடிந்தது. இந்த ஆட்டம் மட்டுமல்ல, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்திலும் ரஷீத் சிறப்பாகவே விளையாடினார். அதன்பின் கரோனா பாதிப்பு ஏற்பட்டு குவாரன்டைன் செய்யப்பட்டவர், அதிலிருந்து மீண்டுவந்து நேற்று சிறப்பான ஒரு நாக்-ஐ விளையாடியுள்ளார். இந்த வெற்றியை அடுத்து ஆந்திர நெட்டிசன்கள் ரஷீத்தை வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
ரஷீத்துக்கு கிடைத்துள்ள இந்தப் புகழ், அவரின் தந்தை பாலிஷாவலியின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாகும். குண்டூரைச் சேர்ந்த பயிற்சியாளர் கிருஷ்ணா ராவ். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ரஷீத்துக்குப் பயிற்சி அளித்த அவர் இந்தப் பாராட்டுக்கள் அனைத்தும் பாலிஷாவலிக்கே என்று குறிப்பிட்டுள்ளார். "மிகவும் எளிமையான பின்னணியை கொண்டவர் ரஷீத்தின் தந்தை. இப்படி ஓர் அர்ப்பணிப்புள்ள தந்தையை இதுவரை நான் பார்க்கவில்லை. அவர் தனது மகனின் வாழ்க்கைக்காக என்ன தியாகம் செய்தார் என்பது எனக்குத் தெரியும். ரஷீத்தின் கடின உழைப்பு, ஆர்வம் அனைத்தும் அவரின் தந்தையின் தியாகங்களால் நடந்தவை" என்று பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.