மும்பை: ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தைப் பெற ஸ்டார் நெட்வொர்க் மற்றும் சோனி ஆகிய இரு நிறுவனங்கள் மத்தியில்தான் அதிகளவில் போட்டி இருக்கும். கடந்த முறை இந்தப் போட்டியை சமாளித்து ஸ்டார் நெட்வொர்க் அந்த உரிமையைப் பெற்றது. கடந்த வருட ஐபிஎல் சீசன் இரண்டு கட்டங்களாக நடந்ததால், ஸ்டார் நெட்வொர்க்கின் வருமானம் பாதித்ததாக சொல்லப்பட்டது. இதனால் இந்த முறை ஸ்டார் நெட்வொர்க் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெறுமா என்பதில் இருந்த சந்தேகங்களுக்கு ஸ்டார் இந்தியாவின் தலைவர் கே.மாதவன் விடைகொடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "விளையாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற, ஸ்டார் நெட்வொர்க் தொடர்ந்து தனது முதலீட்டை செய்யும். அதிக முதலீடு செய்வதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். அனைத்து உரிமங்கள் புதுப்பித்தல்களிலும் நேர்மறையாக இருக்கப் போகிறோம். எங்கள் நிறுவனத்தின் 60%க்கும் அதிகமான பங்குகள் விளையாட்டில்தான் உள்ளது. எனவே, அதை தொடரவே விரும்புகிறோம். ஆனால் எங்கள் வரம்புக்குள் இருந்தால் மட்டுமே, ஒளிபரப்பு ஏலத்தை எடுப்போம்.
இந்தியாவில் விளையாட்டு வணிக சந்தையை உருவாக்கியது ஸ்டார் நெட்வொர்க் தான். கிரிக்கெட், கால்பந்து அல்லது கபடி என எதுவாக இருந்தாலும் அதில் வணிக சந்தையை ஏற்படுத்தியதன் முழு கிரெடிட்டும் டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க்கிற்கே செல்லும். இந்த துறையில் பெரிய தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறோம். எனவே அதிலிருந்து பின்வாங்க முடியாது. இந்தியாவில் உள்ள விளையாட்டு வணிகத்தை மாதாந்திர அடிப்படையிலோ அல்லது ஆண்டு அடிப்படையிலோ எங்கள் நிறுவனம் பார்க்கவில்லை.
எனவே டிஸ்னி + ஸ்டார் நெட்வொர்க்கின் மிகப்பெரிய வணிகமாக விளையாட்டு தொடரும். ஐபிஎல், பிசிசிஐ, ஐசிசி ஒளிபரப்பு உரிமங்கள் புதுப்பித்தல்களில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும் என்று நம்புகிறோம். கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அனைத்து விளையாட்டுகளிலும் முதலீடு செய்கிறோம். இன்று, அனைத்து முக்கியமான விளையாட்டுகளும் ஸ்டார் நெட்வொர்க்கில் நான்கு முதல் ஏழு மொழிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. பிற மொழிகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது ஸ்டார் நிறுவனம் தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட புதுமையான முயற்சி என்று நான் கூறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மற்றும் பிசிசிஐ உடன் ஸ்டார் நெட்வொர்க் மேற்கொண்டுள்ள ஒளிபரப்பு உரிமம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. அதேநேரம், ஐசிசி உரிமைகள் 2023 வரை உள்ளது. இந்தமுறை, ஐபிஎல் மற்றும் பிசிசிஐ ஒளிபரப்பு உரிமங்களை பெற, ஸ்டார் நெட்வொர்க்குக்கு போட்டியாக சோனி நிறுவனம், அம்பானியின் ஜியோ நிறுவனம் போட்டியாக களமிறங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.