மெல்போர்ன்: முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் காலிறுதிக்குத் தகுதி பெற்ற 32 வயது பிரான்ஸ் வீராங்கனையால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் களம் நெகிழ்ச்சிகரமாக அமைந்தது.
எந்த ஒரு டென்னிஸ் வீரருக்கும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தடம் பாதிக்க வேண்டும் என்பது பெருங்கனவாக இருக்கும். அது பலருக்கு சாத்தியப்படுவதில்லை. ஆனால், முயன்றால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளார் பிரான்ஸ் நாட்டு டென்னிஸ் வீராங்கனை அலிஸ் கார்னெட். நேற்று நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் தரவரிசையில் 15 இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை சிமோனா ஹாலெப் உடன் மோதினார் 32 வயதாகும் கார்னெட். சிமோனா ஹாலெப் இரண்டு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். மேலும் இருமுறை உலகின் நம்பர் 1 வீராங்கனையாகவும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளார்.
அதேநேரம், தரவரிசையில் 61-வது இடத்தில் உள்ள அலிஸ் கார்னெட் இதுவரை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றதில்லை. ஏன், இதுவரை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு கூட தகுதிபெற்றதில்லை. ஆனால் நேற்று நடந்த போட்டியில் சிமோனா ஹாலெப்பை 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு தகுதிபெற்றார். கார்னெட் இதுவரை 62 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் அவரின் 63-வது கிராண்ட் ஸ்லாம் போட்டி ஆகும்.
2005-ல் நடந்த பிரெஞ்சு ஓபன் மூலமாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அறிமுகமான கார்னெட் இதுவரை 62 போட்டிகளில் போட்டியிட்டு ஒருமுறை கூட காலிறுதிக்கு தகுதி பெறாவிட்டாலும், தனது விடா முயற்சியால் 63-வது போட்டியில் அந்த கனவை சாத்தியப்படுத்தியுள்ளார். வெற்றிபெற்ற பிறகு உணர்ச்சிவசப்பட்டு டென்னிஸ் களத்திலேயே ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அப்போது ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை ஜெலினா டோகிக் உடனான உரையாடலின்போது உணர்ச்சிமிகுதியில் அவர் பேசினார்.
இந்த உரையாடல்கள் மைதானத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்த, ஒரு சில நிமிடங்கள் ராட் லேவர் டென்னிஸ் களம் உணர்ச்சிபெருக்கில் மூழ்கியது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி உள்ளன. முன்னதாக, தாய்லாந்தை சேர்ந்த டமரைன் என்பவர் தனது 45வது முயற்சியில் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.