விளையாட்டு

சூடு பிடிக்கும் ரன் அவுட் விவகாரம்: குக், ஜெயவர்தனே வாக்குவாதம்

செய்திப்பிரிவு

நேற்று நடைபெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை பந்து வீசாமலேயே ரன் அவுட் செய்தார் சேனநாயகே. இந்த விவகாரம் தற்போது சூடான வாக்குவாதமாக மாறியுள்ளது.

இது குறித்து இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் கூறியதாவது:

"இந்த ரன் அவுட் மூலம் இலங்கை அணி கட்டுப்பாட்டுக் கோட்டை மீறிவிட்டது. டெஸ்ட் போட்டிகளின் போது இதனால் சற்று சலசலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். இது தவிர்க்க முடியாததே.

இதற்கு பதிலடியாக கிரிக்கெட் ஆட்டம்தான் இருக்கவேண்டும். பேசிய வார்த்தைகள் திறமையான ஆட்டமாக மாறவேண்டும்.

மீண்டும் இதனைச் செய்வேன் என்று இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறுகிறார் என்றால் ஒரு கேப்டனாக தன் அணி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் அவர் கவனிப்பது அவசியம்" இவ்வாறு கூறினார் குக்.

இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறுகையில், "அவரது ஓடும் வேகத்தை நிறுத்த என்னதான் செய்வது இதைத் தவிர? அதனால்தான் இப்படி ரன் அவுட் செய்ய முடிவெடுத்தோம்" என்றார்.

ஜெயவர்தனே கூறுகையில், “முதல் எச்சரிக்கைக்கு முன்பே கூட இருமுறை அவரை எச்சரித்தோம், பட்லரும், ஜோர்டானும் ரன்னர் முனையில் பந்து வீசும் முன்பாக கிரீஸை விட்டு கொஞ்சம் அதிகமாகவே முன்னேறுகின்றனர் என்று கூறினோம். மீண்டும் மீண்டும் அவர்கள் இதனைச் செய்யவே நாங்கள் ரன் அவுட் செய்ய முடிவெடுத்தோம் வேறு வழியில்லை.

லார்ட்ஸ் போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 22 முறை இரண்டு ரன்கள் எடுத்தனர். அப்போது அனைத்து தடவைகளிலும் கிரீஸை விட்டு நன்றாகவே வெளியே சென்றனர். இது கிரிக்கெட் விதி முறைகளுக்குப் புறம்பானது.

நடுவர்களிடமும் எச்சரித்தோம், ஆனால் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் அவர்கள் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. எனவே நாங்கள் சரியான முடிவை எடுக்கத் தள்ளப்பட்டோம்.

நாங்கள் எப்பவும் சரியான உணர்வுடனேயே ஆடி வருகிறோம், ஆனால் எதிரணியினர் விதிமுறைகளை மீறும்போது நாங்கள் இப்படிச் செய்ய நேரிடுகிறது. இது துரதிர்ஷ்டவசமானதே" இவ்வாறு கூறினார் ஜெயவர்தனே.

ரன்னர் முனையில் இருக்கும் வீரரை இவ்வாறு முதன் முதலாக ரன் அவுட் செய்தது இந்திய வீரர் வினு மன்காட் ஆவார். அவர் 1947 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பில் பிரவுன் என்பவரை இவ்வாறு ரன் அவுட் செய்ததால் இந்த ரன் அவுட்டிற்கு 'மன்கடட்' என்ற பெயர் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT