பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஷாகித் அப்ரீடி அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றிலேயே வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் டி 20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அப்ரீடி விலகவேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறிவந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அப்ரீடி நேற்று அறிவித்தார்.
தனது ட்விட்டர் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் அவர் இதை அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் டி20 போட்டிகளில் தான் தொடர்ந்து விளையாடப் போவதாக கூறியுள்ளார்.